2015-02-11 15:27:00

அமைதி ஆர்வலர்கள் – 1973ன் நொபெல் அமைதி விருது - பாகம் 1


பிப்.11,2015. 1972ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. ஆல்பிரட் நொபெல் அவர்கள் எழுதி வைத்துள்ள உயிலின்படி இவ்விருது நிதி, பொது சேமிப்பில் வைக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டின் நொபெல் அமைதி விருது, வியட்நாம் நாட்டின் Le Duc Tho, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Henry Alfred Kissinger ஆகிய இருவருக்குமென அறிவிக்கப்பட்டது. 1973ம் ஆண்டில் வியட்நாமில் போர் நிறுத்தம் ஏற்படவும், வியட்நாமிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் திருப்பி அழைக்கப்படவும் இவ்விருவரும் ஆற்றிய பணிகளைப் பாராட்டி இவ்விருது அறிவிக்கப்பட்டது. ஆயினும் இந்தப் போர் நிறுத்தம் நீடிக்கவில்லை. Le Duc Tho இந்த நொபெல் விருதைப் பெறுவதற்கு மறுத்து, அதை அக்குழுவுக்குத் திருப்பி அனுப்பி விட்டார். அதற்கு அவர் கூறிய காரணங்களை அடுத்த வார நிகழ்ச்சியில் பார்ப்போம்.

1973ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்ட மற்றொருவரான ஹென்ரி ஆல்பிரட் கிஸ்ஸிஞ்செர், ஓர் அரசியல் அறிவியலாளர். 1969ம் ஆண்டு முதல், 1975ம் ஆண்டுவரை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், ரிச்சர்டு நிக்சன், ஜெரால்டு ஃபோர்டு ஆகிய இரு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர்களின் நிர்வாகங்களில் அரசுச் செயலராகவும் இவர் பணிபுரிந்தார். அரசுத்தலைவர் ரிச்சர்டு நிக்சன் முன்னிலையில், தலைமை நீதிபதி Warren Burger அவர்களால் அரசுச் செயலராக இவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டபோது, கிஸ்ஸிஞ்செரின் தாய் பவுலா விவிலியத்தைப் பிடித்துக்கொள்ள, இவர் உறுதிமொழி எடுத்தார். கிஸ்ஸிஞ்செர் அந்நாட்டின் 56வது அரசுச் செயலராக 1973ம் ஆண்டு முதல், 1977ம் ஆண்டுவரை பணியாற்றியவர். அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், கிஸ்ஸிங்கர் கழகத்தினர் என்ற ஒரு பன்னாட்டு ஆலோசனை அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகவும் இருந்தார்.

ஜெர்மனியின் Fuerthல், 1923ம் ஆண்டு மே 27ம் தேதி பிறந்த கிஸ்ஸிஞ்செர், 1938ல்  அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறினார். தெற்கு கரோலினாவில் இராணுவப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது, தனது இருபதாவது வயதில் 1943ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி அமெரிக்கக் குடிமகனாக இவர் அங்கீகரிக்கப்பட்டார். 1950ல் ஹார்வர்டு கல்லூரியில் இளங்கலைப் பட்டயப் படிப்பில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்றார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1952ல் முதுகலைப் பட்டமும், 1954ல் முனைவர் பட்டமும் பெற்றார் இவர். 1954ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டுவரை அதே பல்கலைக்கழகத்தில் அரசுத் துறையிலும், அனைத்துலக விவகார மையத்திலும் உறுப்பினராகவும், பின்னர் (1957-1960) அதன் இணை இயக்குனராகவும் பணியாற்றினார் கிஸ்ஸிஞ்செர்.

அணுஆயுத மற்றும் வெளிநாட்டுக் கொள்கைக்கும், வெளியுறவு அவைக்கும் ஆய்வு இயக்குனராகவும் (1955-1956), ராக்ஃபெல்லர் சகோதரர்கள் நிதிக்கு சிறப்பு ஆய்வுத் திட்டத்தின் இயக்குனராகவும் (1956-1958), ஹார்வர்டு பன்னாட்டு கருத்தரங்கு இயக்குனராகவும் (1951-1971), ஹார்வர்டு பாதுகாப்பு ஆய்வுப் படிப்புக்கு இயக்குனராகவும் (1958-1971) பணியாற்றியிருக்கிறார் கிஸ்ஸிஞ்செர். அமெரிக்க ஐக்கிய நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள், அனைத்துலக விவகாரங்கள், தூதரக வரலாறு ஆகிய தலைப்புகளில் பல நூல்களையும், கட்டுரைகளையும் இவர் எழுதியிருக்கிறார். அரசு, அரசியல், அனைத்துலக விவகாரங்கள்(1958) ஆகிய துறைகளில் சிறந்த நூல்களை எழுதியதற்காக, Guggenheim Fellowship விருது (1965-66), Woodrow Wilson விருது, அமெரிக்க நிறுவன பொதுச்சேவை விருது(1973), தியோடர் ரூஸ்வெல்ட் விருது(1973), அனைத்துலக புரிதல் நம்பிக்கை விருது (1973),  அரசுத்தலைவர் விடுதலை பதக்கம்(1977), சுதந்திர பதக்கம் (1986) உட்பட பல விருதுகளைப் பெற்றிருப்பவர் கிஸ்ஸிஞ்செர்.

அரசுத்தலைவர் நிக்சனுக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றத் தொடங்கும் முன்னரே இந்தோசீனா விவகாரத்தில் ஈடுபட்டார் கிஸ்ஸிஞ்செர். இவர் ஹார்வர்டில் பணியாற்றும்போதே, சாய்கான் தூதரக அதிகாரியின் பரிந்துரையின்பேரில், 1965ம் ஆண்டில் வியட்நாம் சென்று நிலைமையைப் பரிசீலனை செய்துள்ளார். மூன்று தடவைகள் அந்நாடு சென்ற இவர், வியட்நாமில் இராணுவத்தால் வெற்றிபெறுவது அர்த்தமற்றது என உணர்ந்தார். 1967ல் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். 1968ல் அரசுத்தலைவராகப் பதவியேற்ற நிக்சன், வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவர உறுதியளித்தார். கிஸ்ஸிஞ்செரின் உதவியுடன் அமெரிக்கப் படைகள் மெது மெதுவாக வியட்நாமிலிருந்து திருப்பி அழைக்கப்படும் திட்டத்தை அமல்படுத்தினார் நிக்சன்.

1971ம் ஆண்டில் பங்களாதேஷ் விடுதலைப் போர் நடந்தபோது கிஸ்ஸிஞ்செரின் வழிகாட்டுதலில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தது. இந்தியாவும் சோவியத் யூனியனும் நட்பு உடன்படிக்கை ஏற்படுத்தியதன் காரணமாக, தெற்கு ஆசியாவில் சோவியத்தின் செல்வாக்கு வலுப்பெறும் என்று பயந்தவர் இவர். இதுபோன்று இன்னும் பிற வெளிநாட்டு விவகாரங்களிலும் ஈடுபாடு காட்டியவர் ஹென்ரி ஆல்பிரட் கிஸ்ஸிஞ்செர். இவரது அரசியல் கருத்துக்கள், பல உலக தலைவர்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.

நீ போகும் இடம் உனக்குத் தெரியாவிட்டால் எல்லா சாலைகளுமே உன்னை எங்குமே கொண்டு சேர்க்காது. 90 விழுக்காட்டு அரசியல்வாதிகள், மீதமுள்ள பத்து விழுக்காட்டினருக்கு கெட்ட பெயரையே பெற்றுத் தருகின்றனர். ஒரு தலைவர் அவ்வப்போது தனித்து நின்று செயல்பட விருப்பம் காட்டவில்லையெனில் அவருக்குக் கிடைக்கும் பெயருக்கு அவர் தகுதியற்றவர். ஒவ்வொரு வெற்றியும், இன்னும் அதிகமான பிரச்சனைக்கு அனுமதிச் சீட்டை வாங்குவதாகும். எந்த ஒரு நாடும், ஒரே நேரத்தில் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் எல்லா நேரத்திலும் ஞானத்துடன் செயல்பட முடியாது. இவ்வாறெல்லாம் சொன்னவர் 1973ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற ஹென்ரி ஆல்பிரட் கிஸ்ஸிஞ்செர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.