2015-02-10 15:39:00

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை – பகுதி - 5


திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு பார்கின்சன் (Parkinson’s) நோய் இருந்ததென்று 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 14 ஆண்டுகள் இந்த நோயால் துன்புற்றாலும், அவர் தன் பணிகளைத் தொடர்ந்தார். இந்த நோயில் அவர் அடியெடுத்து வைத்ததும், நோய்களால் துன்புறும் கோடான கோடி மக்களுடன் தன்னையே அவர் இணைத்துக்கொண்டார். 1992ம் ஆண்டு, நோயுற்றோர் உலக நாளை அவர் உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது. லூர்து நகருக்குச் செல்லும் கோடான கோடி நோயாளர்கள், அன்னை மரியாவின் பரிந்துரையால் நலமடைந்துள்ளனர் என்பது உலகம் அறிந்த உண்மை என்பதால், இந்த நாளை, நோயுற்றோர் உலக நாளாக, புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் தேர்ந்திருக்கவேண்டும்.

நோயாளருக்கென ஒரு தினமா? என்று நம்மில் பலர் கேள்வி எழுப்பலாம். நோய் என்றதும் எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே நம் மனதில் உருவாவதால், நாம் இந்தக் கேள்வியை எழுப்புகிறோம். அன்னையர் தினம், தந்தையர் தினம், விரைவில் நாம் கொண்டாடவிருக்கும் காதலர் தினம், நட்பு தினம் என்று பல்வேறு தினங்கள் எதற்கு? அந்த ஒரு நாளிலாவது பாசம், காதல், நட்பு என்ற அழகிய உண்மைகளை இன்னும் ஆழமாகச் சிந்திக்கவேண்டும் என்று வலியுறுத்தவே இத்தினங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், என்ன பரிதாபம்! இத்தினங்களுக்கே உரிய உயர்ந்த பல எண்ணங்களிலிருந்து நம்மைத் திசைத்திருப்பும்வண்ணம் அன்னையர், தந்தையர், காதலர், நண்பர்கள் என்ற பல தினங்களை வர்த்தக உலகம் அபகரித்துக் கொண்டுவிட்டது. வர்த்தக உலகம் இத்தினங்களைப் பரிசுப் பொருள்களால் நிறைத்துவிட்டன. நம் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, அவர்களுக்காகப் பணத்தை மட்டும் செலவிடும் வழிகளை வர்த்தக உலகம் நமக்குச் சொல்லித் தந்துள்ளது.

நல்லவேளை, உலக நோயாளர் தினத்தை வர்த்தக உலகம் இன்னும் அபகரிக்கவில்லை. அபகரிக்கவும் தயங்கும். ஏனெனில், இந்த தினத்தை வைத்து வியாபாரம் செய்ய முடியாதே! வர்த்தக உலகின் ஆதிக்கம், ஆர்ப்பாட்டம் இவை ஏதும் இல்லாத இந்த நாளை நமக்கு வழங்கி, நமது எண்ணங்களையும், கவனத்தையும் நோயாளர் மீது திருப்பியுள்ளதற்காக நாம் தாய் திருஅவைக்கும், சிறப்பாக, புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

பிப்ரவரி 11, இப்புதனன்று நாம் சிறப்பிக்கும் 23ம் உலக நோயாளர் தினத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழகானதொரு செய்தியை வெளியிட்டுள்ளார். அன்னையர், தந்தையர் தினங்களில் பெற்றோருடன் நேரத்தைச் செலவிட மனமில்லாத நாம், அந்தக் குறையைப் பூசி மெழுகுவதற்காக மலர்க் கொத்துக்களையும், பரிசுகளையும் வாங்கி, அவர்களுக்கு அனுப்பி வைப்பதில் பணத்தைச் செலவிடுகிறோம்.

குடும்பங்களில் ஒருவர் ஒருவருக்காக அர்த்தமுள்ள வகையில் நேரத்தைச் செலவிடத் தயங்கும் இன்றைய உலகின் போக்கை நன்கு உணர்ந்தவர், திருத்தந்தை பிரான்சிஸ். குறிப்பாக, நம் குடும்பங்களில், நோயுற்றோர், வயதில் முதிர்ந்தோர் ஆகியோருடன் நேரம் செலவிடத் தயங்கும் நமது நிலையை தான் வழங்கிய செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. "இதயத்தின் அறிவாற்றல்" (Sapientia Cordis - Wisdom of the Heart) என்ற தலைப்பில் திருத்தந்தை விடுத்திருக்கும் 23ம் உலக நோயாளர் தினச் செய்தியில், பின்வரும் வரிகள் என் கவனத்தை அதிகம் ஈர்த்தன:

இதயத்தின் அறிவாற்றல் என்பது, நம் சகோதர, சகோதரிகளுடன் உடனிருப்பது. நோயுற்றோருடன் நாம் செலவிடும் நேரம், புனிதமானது...

இதயத்தின் அறிவாற்றல் என்பது, நம் சுயநலத்தை விட்டு வெளியேறி, சகோதர, சகோதரிகளை நோக்கிச் செல்வது. நோயுற்றோரின் படுக்கையருகே நாம் நேரம் செலவிடுவதன் சிறப்பை இவ்வுலகம் மறந்து வருகிறது. எதையாவது செய்யவேண்டும், உருவாக்க வேண்டும் என்ற வெறியில், நாம் விரைந்துகொண்டே இருப்பதால், அடுத்தவரைக் காக்கவேண்டும், அவருக்காக பொறுப்பேற்கவேண்டும், அடுத்தவருக்காக நம்மையே வழங்கவேண்டும் என்ற எண்ணங்களை மறந்துவிடுகிறோம். 'நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்' (மத். 25:40) என்று நம் ஆண்டவர் சொன்ன வார்த்தைகளை நம்புவதற்கு நாம் தயங்குகிறோம்.

கடந்த 23 ஆண்டுகளாக நோயாளருக்கென ஒரு நாளை அர்ப்பணித்து, அவர்கள் மீது கத்தோலிக்கக் குடும்பத்தின் கவனம் திரும்பவேண்டும் என்று தாய் திருஅவை நம்மைத் தூண்டிவருகிறார். அதேபோல், பிப்ரவரி 8, கடந்த ஞாயிறன்று, மனித சமுதாயத்தில் துன்புறும் மற்றொரு குழுவினர் மீது நம் கவனம் திரும்பவேண்டும் என்ற முயற்சியை, திருஅவை துவங்கியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 8ம் தேதி, புனித ஜோசப்பின் பக்கித்தா (St Josephine Bakhita) அவர்களின் திருநாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் அரேபிய அடிமை வர்த்தகர்களால் கடத்தப்பட்டு, 16 வயது முடிய அடிமை வாழ்வின் கொடுமைகளால் துன்புற்று, பின்னர், இறைவனின் பணியில் தன்னை அர்ப்பணித்த புனித பக்கித்தா அவர்களின் திருநாளை, 'மனித வர்த்தகத்திற்கு எதிராக  விழிப்புணர்வும், செபமும் மேற்கொள்ளும் உலகச் செப நாளா'கக் (The International Day of Prayer and Awareness against Human Trafficking) கடைபிடிக்கும்படி தாய் திருஅவை அறிவித்துள்ளது.

உடல் நோய்களாலும், மனித வர்த்தகம் போன்ற சமுதாய நோய்களாலும் துன்புறுவோர், உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பது மிக அரிது. மனித குடும்பத்தின் கவனத்தை ஈர்ப்பவர்கள், பெரும்பாலும் வெற்றி அடைபவர்கள், அல்லது, குற்றம் புரிபவர்கள். நோயுற்றோரும், அடிமைகளும் சமுதாயத்தின் கவனத்தை பொதுவாக ஈர்ப்பதில்லை. எப்போது அவர்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றனர்? 'எபோலா' போன்ற கடும் நோய்க்கு உள்ளாகி, நூற்றுக்கணக்கில் இறக்கும்போது, நோயுற்றோரும், நாடுவிட்டு நாடு துரத்தப்படும் மக்களை ஏற்றிவரும் கப்பல் ஒன்று கடலில் மூழ்கும்போது, சமுதாயக் கொடுமைகளை அனுபவிக்கும் மக்களும் ஊடகங்களின் கவனத்தையும், நம் கவனத்தையும் ஈர்க்க வாய்ப்புண்டு. மற்றபடி, நோயுற்றோரும், அடிமைகளும் நம் கவனத்தை ஈர்க்காத கடைசி இடத்தில் இருப்பவர்களே!

கடைசியான இவர்களை முதலானவர்களாக மாற்ற பிப்ரவரி 8, 11 ஆகிய நாட்கள் வழியே, தாய் திருஅவை முயற்சி எடுத்திருப்பது, நற்செய்தியில் இயேசு கூறும் ஒரு முக்கிய கருத்தை நினைவுக்குக் கொணர்கிறது. நாம் கடந்த சில வாரங்களாகச் சிந்தித்துவந்த "திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை"யின் இறுதியில் இக்கருத்து கூறப்பட்டுள்ளது: "கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" (மத். 20:16)

இயேசு கூறும் இவ்வார்த்தைகளைக் கேட்கும் இவ்வுலகம், கேலியாகச் சிரிக்கும். இவ்வுலகைப் பொருத்தவரை, 'முதலானோர் இன்னும் அதிக அளவில் முதலாவர்; கடைசியானோர், மேலும் கடைசியாவர்' என்பதே நடைமுறை.

இந்த நடைமுறைக்கு மாற்றாக புரட்சிகள் நடந்து, கடைசியானோர் முதன்மையானவராக மாறிய கதைகளும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த வரலாற்று நிகழ்வுகள் ஓர் ஆபத்தான, தவறான கருத்தை வலியுறுத்துகின்றன. இந்த வரலாறு சொல்லித்தரும் பாடம் இதுதான் - அதாவது, கடைசியிலிருந்து முதலிடத்திற்கு வருபவர், மற்றவர்களுடன் போட்டியிட்டு,  முதலிடத்தில் இருப்பவரை அகற்றிவிட்டு, அவ்விடத்தை அவர் பற்றிக்கொண்டார் என்ற கருத்தே இந்த வரலாற்றில் வலியுறுத்தப்படுகிறது.

கடைசியானோர் முதலிடத்தைப் பெறும் இத்தகையக் கதைகள் ஆச்சரியம் கலந்த மகிழ்வைத் தருகின்றன என்பது உண்மைதான். ஆனால், இவ்வுலகம் வெளிச்சமிட்டுக் காட்டும் இந்தக் கதைகளில், 'முதல்', 'கடைசி' என்ற இடங்கள் எப்போதும் நிரந்தரமாக நிலைநாட்டப்படுகின்றன. அந்த இடங்களுக்குச் செல்பவர் மாறலாமே தவிர, முதல், கடைசி என்ற இடங்கள் மாறுவதில்லை. முதல், கடைசி என்று இடங்கள் மாறாமல் இருக்கும்வரை, அவ்விடங்களை அடைவதற்கு போட்டிகளும் அவசியமாகின்றன. முதலாளித்துவம் என்ற பொருளாதார அடிப்படையில் சித்திரிக்கப்படும் உலகம் இது... வரலாறு இது...

'திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை'யின் இறுதியில், முதல், கடைசி என்ற வார்த்தைகளுடன் இயேசு கூறும் உலகம், முதலாளித்துவ உலகிலிருந்து மாறுபட்டு, ஒரு சமத்துவ உலகை சித்திரிக்கிறது.

இவ்வுவமையின்படி, இறுதி ஒருமணி நேரமே உழைத்தவர், முதலில் வந்து ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் நாணயத்தைப் பெறுகிறார். நாள் முழுவதும் உழைத்தவருக்குப் போட்டியாக இவர் வந்து முதலிடம் பெற்றார் என்றோ, பல மணி நேரங்கள் உழைத்தவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கூலியை இவர் போட்டியிட்டுப் பறித்துச் சென்றார் என்றோ இயேசு கூறவில்லை.

உழைத்தவர்கள் அனைவருக்கும் சரி சமமான, நியாயமான கூலி வழங்கப்படுகிறது. அதுவும், இறுதியில் வந்தவருக்கு அந்தக் கூலி முதலில் வழங்கப்படுகிறது. நீதியும், சமத்துவமும் ஒருவரின் தகுதியின் அடிப்படையிலோ, போட்டியின் அடிப்படையிலோ கிடைப்பதல்ல, மாறாக, இறைவனின் கருணையால், தாராள மனத்தால் கிடைப்பன என்பதை இயேசுவின் இந்த உவமையும், இறுதி வரிகளும் ஆணித்தரமாக கூறுகின்றன.

லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளன்று, "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது" என்று அந்த அன்னை பாடிய புரட்சிப் பாடலின் சில வரிகள், "கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" (மத். 20:16) என்ற இயேசுவின் கூற்றை நமக்கு நினைவுறுத்துகின்றன:

லூக்கா நற்செய்தி 1: 51-53

உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

உடல் நோய்களாலும், அடிமை வர்த்தகம் போன்ற சமுதாய நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இறைவன் முதலிடம் கொடுப்பதுபோல, நாமும் இவர்களுக்கு முதலிடம் கொடுத்து, இவர்களுடைய வாழ்வை மேம்படுத்தும் மனதை வளர்த்துக்கொள்ள இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.