2015-02-10 15:48:00

டெல்லி தேர்தலில் மக்கள் தீர்ப்பு, டெல்லி பேராயர் கருத்து


பிப்.10,2015. பிஜேபி கட்சிக்கும், மதத்தின் பெயரால் வாக்காளர்களைத் திசை திருப்புவதற்கு அக்கட்சி எடுத்த முயற்சிக்கும் எதிராக டெல்லி மக்கள் வாக்களித்திருப்பது, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கின்றது என்று டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள் கருத்து தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரின் கட்சி, அமோக வெற்றி பெற்றுள்ளது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்துக்குத் கருத்தை தெரிவித்த டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள், பிரதமர் மோடி அவர்கள் தனது நடவடிக்கைகளை உண்மையாய்ச் சிந்திக்க வேண்டுமென்று கூறினார்.

இந்திய மக்களின் அதிருப்தியையும், ஆலயங்கள் தாக்கப்பட்டதன் எதிர்மறை விளைவையும் இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்றும் கூறிய டெல்லி பேராயர், ஐந்து ஆலயங்கள் தாக்கப்பட்டபோது பிஜேபி அரசு மௌனம் காத்ததும் பற்றியும் சுட்டிக் காட்டினார்.

டெல்லி சட்டப் பேரவையின் 70 தொகுதிகளுக்கானத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

2014ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிஜேபி முதல்முறையாக படுதோல்வியைத் தழுவியுள்ளது.

பிரதமர் மோடி அவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, தொலைபேசியில் அழைத்து முதல் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ஆதாரம் :Asianews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.