2015-02-10 09:57:00

சமய சுதந்திரம் காக்கப்படுமாறு இந்திய ஆயர்கள் வலியுறுத்தல்


பிப்.10,2015. இந்தியாவில் அதிகரித்துவரும் அடிப்படைவாதமும், வகுப்புவாதமும் நாட்டின் சமூக வாழ்வையும், சமயச்சார்பற்ற தன்மையையும் அச்சுறுத்திவரும்வேளை, நாட்டில் சட்டமும், சமய சுதந்திரமும், அமைதியும் காக்கப்படுமாறு ஆயர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

CCBI என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் 140 ஆயர்கள் பெங்களூருவில் ஒரு வாரக் கூட்டத்தை இத்திங்களன்று நிறைவுசெய்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ஆலயங்கள் எரிக்கப்பட்டது, அருள்பணியாளர்கள், பொதுநிலையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கிறிஸ்தவத்திலிருந்து மக்களை இந்து மதத்துக்கு மொத்தமாக மாற்றியது போன்ற கவலைதரும் நிகழ்வுகளையும் ஆயர்கள் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்பு எண் 25ல் உறுதி வழங்கப்பட்டுள்ள மனச்சான்றின் சுதந்திரத்துக்குச் சவால் விடுக்கும் விதத்தில் அரசுத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் அறிக்கைகள் குறித்தும் கவலை தெரிவித்துள்ள ஆயர்கள், நாட்டின் கல்வி அமைப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.

பண்பாட்டுமயமாக்கலை நடைமுறைப்படுத்தும் வழிகளில், திருவழிபாட்டின் மரபுகளும், மாண்பும் காக்கப்படும்பொருட்டு திருவழிபாடு குறித்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்துமாறும் ஆயர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது. 

திருவழிபாடும் வாழ்வும் என்ற தலைப்பில் இம்மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற CCBI ஆயர்கள் பேரவையின் 27வது ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில், அப்பேரவையின் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், உதவித் தலைவர் கோவா பேராயர் பிலிப் நேரி ஃபெராரோ, பொதுச் செயலராக கோழிக்கோடு ஆயர் வர்க்கீஸ் சக்களக்கள் ஆகிய மூவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதில் இந்தியாவின் 131 இலத்தீன் மறைமாவட்டங்களின் 140 ஆயர்கள் கலந்து கொண்டனர். 

ஆதாரம் : Ind.Sec /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.