2015-02-10 15:56:00

கல்வி கற்க முயலும் சிறுமிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு


பிப்.10,2015. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது எழுபது நாடுகளில், பள்ளிகள், குறிப்பாக, கல்வியில் பாலினச் சமத்துவத்துக்காக உழைக்கும் சிறுமிகள், பெற்றோர் மற்றும் ஆர்வலர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

கல்வி கற்க முயற்சிக்கும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 2009க்கும் 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், குறைந்தது எழுபது நாடுகளில், சிறுமிகள் பயிலும் பள்ளிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்வி பெறுவதற்குக் கொண்டிருக்கும் உரிமை, அந்தந்த சமுதாயத்தில் நிலவும் பாலின வேறுபாட்டுக்கும், பாலின அடிப்படையில் நிலவும் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்ற எண்ணத்தில் இத்தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவ்வறிக்கை கூறுகிறது.

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களையும் ஐ.நா. குழுவுக்குச்(CEDAW) சமர்ப்பிப்பதற்கென எடுக்கப்பட்ட இந்த ஆய்வு, பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதால் சமூகத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படுவதாக எச்சரிக்கிறது.

பாகிஸ்தானின் பேஷ்வார் இராணுவப் பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பரில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் கொல்லப்பட்டது, கடந்த ஆண்டு ஏப்ரலில் நைஜீரியாவில் போக்கோ ஹாரம் அமைப்பு ஏறக்குறைய 300 சிறுமிகளைக் கடத்தியது போன்வற்றைக் குறிப்பிட்டுள்ளது இவ்வறிக்கை. 

ஆதாரம் :UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.