2015-02-10 15:27:00

ஓய்வின்றித் தேடும் இதயங்கள் கடவுளைக் கண்டுகொள்ளும்


பிப்.10,2015. பளபளக்கும் வசதியான படுக்கைகளில் அமர்ந்து கொண்டு பத்திரிகைகள் வழியாகவும், கணனிகளில் வேலை செய்துகொண்டும் கடவுளைத் தேடினால் அவரைக் காண முடியாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளைத் தேடுதல் என்பது, ஆபத்தான பாதையில் அடியெடுத்து வைப்பதற்குத் துணிவைக் கொண்டிருப்பதாகும், அதாவது, ஓய்வின்றித் தேடும் துணிச்சலான இதயங்களைக் கொண்டிருப்பதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.

தொடக்க நூலில் கடவுளின் உருவில் மனிதர் படைக்கப்பட்டது (தொ.நூ.1:20-2:4a) குறித்துப் பேசும் இந்நாளின் முதல் வாசகத்தின் அடிப்படையில், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது மூலத்தையும், தனித்துவத்தையும் தேடும் கிறிஸ்தவர் தேர்ந்தெடுக்கும் சரியான மற்றும் தவறான பாதைகள் பற்றிப் பேசிய திருத்தந்தை, கணனியிலும், கலைக்களஞ்சியங்களிலும் கடவுளின் உருவை நிச்சயமாகக் காண முடியாது என்றும் கூறினார்.

கடவுளின் உருவைக் கண்டுகொள்ளவும், நமது சொந்த தனித்துவத்தைப் புரிந்துகொள்ளவும் ஆபத்தான பாதையில் துணிச்சலுடன் தொடர வேண்டும், இல்லாவிடில், நாம் ஒருபோதும் கடவுளின் முகத்தையும், அவரின் உருவத்தையும்  காண முடியாது என்றும் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்காக நாம் மேற்கொள்ளும் பயணத்தில் கடவுளை அனுமதிப்பது சோதனை நிறைந்தது என்றும், இறைவாக்கினர்கள் எலிசா, எரேமியா, யோபு போன்றவர்கள் ஆபத்துக்களைத் துணிச்சலுடன் சந்தித்தனர் என்றும் கூறிய திருத்தந்தை, தங்களின் தனித்துவத்தைத் தேடும் பாதையில் அடியெடுத்து வைப்பதற்குப் பயந்த மக்களை இயேசு சந்தித்தது பற்றி இன்றைய நற்செய்தி (மாற்.7:1-13)கூறுகிறது என்றார்.

இரு அடையாள அட்டைகளாகவுள்ள இவ்விரு பகுதிகள் பற்றி தியானிக்க நாம் அழைக்கப்படுகிறோம், சரியான பாதையில் நாம் எப்பொழுதும் இருப்பதற்கு கடவுளிடம் வரம் கேட்போம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.