2015-02-10 15:41:00

உக்ரேய்னில் போரைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி உரையாடல்


பிப்.10,2015. உக்ரேய்னில் போரைத் தவிர்ப்பதற்கும், பிரச்சனைகள் தீர்க்கப்படவும், உரையாடலே ஒரே வழி என்று திருத்தந்தையும் திருப்பீடமும் வலியுறுத்துவதாக திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

உக்ரேய்ன் நாட்டின் நெருக்கடி நிலை குறித்த திருப்பீடத்தின் நிலைப்பாடு குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் விளக்கிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், சண்டைகள் இடம்பெறும் இடங்களில், பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியைக் கொண்டுவருமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல தருணங்களில் அழைப்பு விடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

போர்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை விண்ணப்பித்து வருவதையும் குறிப்பிட்ட அருள்பணி லொம்பார்தி அவர்கள், உக்ரேய்ன் நாட்டின் கிழக்குப் பகுதி உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் நெருக்கடி நிலைகளை திருப்பீடம் மிகவும் அக்கறையுடன் கவனித்து வருகிறது என்று கூறினார்.

இம்மாதம் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை அத் லிமினா சந்திப்பை முன்னிட்டு உக்ரேய்ன் ஆயர்களைச் சந்திப்பதற்கு திருத்தந்தை ஆவலோடு காத்திருப்பதாகவும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.