2015-02-09 16:24:00

திருத்தந்தை : போதித்தலும் குணப்படுத்தலும் கிறிஸ்தவப் பணி


பிப்.09,2015. காயமுற்றிருக்கும் நம் அனைவரையும் குணப்படுத்தவும், நமக்கு போதிக்கவும் இயேசுவை அனுமதிப்போம் என இஞ்ஞாயிறன்று திருப்பலியின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி பணியாற்றிவரும் உரோம் நகரின் Pietralataவின் புனித மிக்கேல் தலைமைத்தூதர் பங்குத்தளத்திற்கு இஞ்ஞாயிறன்று சென்று திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போதித்தல் மற்றும் குணப்படுத்தல் என்ற தலைப்பில் மறையுரை வழங்கினார்.

நம்ம்மைக் குணப்படுத்தவும் நமக்கு போதிக்கவும் இயேசுவை நாம் அனுமதிப்பதன் வழியே, நாம் பிறர் காயங்களைக் குணப்படுத்தவும், பிறருக்குப் போதிக்கவும் உதவியைப் பெறுகின்றோம் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தினமும் நற்செய்தியை வாசிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பெனித்தோ முசோலினியின் ஆட்சிக்காலத்தில் உரோம் நகர் சீரமைக்கப்பட்டபோது, அங்கிருந்து விரட்டப்பட்ட ஏழை மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட Pietralata பகுதி, தற்போது ஏழைகளின் புகலிடமாக உரோம் நகர் எல்லைக்குள்ளேயே இருந்து வருகிறது. இப்பகுதிக்கு ஞாயிறன்று மாலை பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு திருப்பலிக்கு முன்  ஒப்புரவு அருள் அடையாளத்தை நிறைவேற்றியதோடு, இளையோரோடு கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.