2015-02-09 16:37:00

இயேசுவின் குணமளிக்கும் பணியில் திருஅவை தொடர்ந்து உதவி


பிப்.09,2015. வரும் புதனன்று சிறப்பிக்கப்படவிருக்கும் உலக நோயாளர் தினம் குறித்த தன் கருத்துக்களை, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகமான, இயேசு எண்ணற்ற மக்களை குணப்படுத்திய பகுதி குறித்த தன் கருத்துக்களை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட மக்களையும், ஏழைகள், பாவிகள், பேய்பிடித்தோர் என அனைவரையும் இயேசு அன்புகூர்ந்து குணப்படுத்தியது, நோயின் அர்த்தம் மற்றும் மதிப்பு குறித்து நமக்குக் கற்பிக்கின்றது என்றார்.

புதனன்று சிறப்பிக்கப்படும் உலக நோயாளர் தினத்திற்கு முந்தைய நாள் மாலை உரோம் நகரில் திருவிழிப்புக் கொண்டாட்டங்கள் இடம்பெற உள்ளதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட திருப்பீட நலப்பணி அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski அவர்கள், தற்போது போலந்தில் உடல் நலம் குறைந்திருப்பதை அறிவித்து, அவருக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இயேசு தன் சீடர்களை நற்செய்தி அறிவிப்புப் பணிக்கென அனுப்பியபோது, 'நோயாளிகளுக்குக் குணமளியுங்கள்' எனக் கூறியதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் இவ்விண்ணப்பத்தை திருஅவை எப்போதும் தொடர்ந்து ஆற்றிவருகிறது எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.