2015-02-07 14:45:00

பொதுக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


அந்த ஊர் பள்ளியில் ஓர் இளம் பெண் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். ஒரு வாரம் சென்றபின், பள்ளியின் நிர்வாகி அவரை அழைத்து, கூடுதலாக ஒரு பணியை அவருக்குக் கொடுத்தார். வாரத்தில் ஒரு நாள் அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு கணக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும் என்பதே அந்தப் பணி. நிர்வாகி சொன்னதற்கு மறுப்பு சொல்லமுடியாமல், அந்தப் பெண் அடுத்த நாள் மருத்துவ மனைக்குச் சென்றார். படுக்கையில் கிடந்த அந்தச் சிறுவனைப் பார்த்ததும் அவருக்குப் பெரும் அதிர்ச்சி.

ஒரு தீ விபத்தால் உடலெங்கும் வெந்துபோய் படுத்துக்கிடந்தான் அந்தச் சிறுவன். இவனுக்குக் கணக்குப் பாடம் சொல்லித்தர வேண்டுமா என்று அந்த இளம் பெண்ணின் மனம் தடுமாறியது. இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே என்பதால், அவனுக்கு அரைமணி நேரம் கணக்குப் பாடம் சொல்லித் தந்தார். தீக்காயங்களுடன் கிடந்த அவனைப் பார்க்கவும் தைரியம் இல்லாமல் எதோ ஒரு வகையில் சமாளித்து, அவனுக்குப் பாடம் சொல்லித் தந்தார் அந்த இளம்பெண். வேதனையில் முனகிக் கொண்டிருந்த அச்சிறுவன், அவ்வப்போது தலையை ஆட்டினான். மீண்டும் அடுத்த ஞாயிறு வருவதாகச் சொல்லி புறப்பட்டார் அந்த இளம்பெண். உடலெல்லாம் எரிந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்குக் கணக்குப் பாடம் சொல்லித் தந்தது அவருக்கே வேதனையாக இருந்தது. அடுத்த ஞாயிறு ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடியே வீட்டுக்குத் திரும்பினார்.

இருந்தாலும், அடுத்த ஞாயிறு வந்தபோது, அந்த இளம்பெண் அச்சிறுவனைப் பார்க்க எண்ணினார். அவனுக்குப் பாடம் சொல்லித் தரவில்லையென்றாலும், அவனைப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. அவர் அங்கு சென்றபோது, மருத்துவமனை வாசலிலேயே அச்சிறுவனுடைய அம்மா அந்த இளம்பெண்ணைச் சந்தித்தார். "நீங்கள்தான் என் மகனுக்கு போன வாரம் கணக்கு சொல்லித் தந்தீர்களா?" என்று கேட்டார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு கணக்கு சொல்லித்தந்தது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான செயல் என்பதை அந்தத் தாய் தன்னிடம் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்து, அந்த இளம்பெண் பயந்தார். "கணக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால்தான் நான் அப்படிச் செய்தேன்..." என்று தயங்கி, தயங்கி அந்த இளம் பெண் சமாதானம் சொல்ல ஆரம்பித்தார்.

அந்தத் தாய் இளம்பெண்ணின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. "நீங்கள் எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது" என்று அந்தத் தாய் சொன்னதும் இளம்பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம். அந்தத் தாய் தொடர்ந்தார்: "சென்ற ஞாயிறு நீங்கள் வருவதற்கு முன், என் மகன், தான் உயிர் பிழைக்கமாட்டோம் என்று அவனே தீர்மானித்துவிட்டான். எனவே, உண்ண மறுத்தான், மருந்து சாப்பிட மறுத்தான். ஆனால், நீங்கள் கணக்குப்பாடம் சொல்லித்தந்த நாளிலிருந்து என் மகனிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. 'எனக்கு கணக்குப் பாடம் சொல்லித் தர ஓர் ஆசிரியரை என் பள்ளி அனுப்பியுள்ளது என்றால், நான் கட்டாயம் மீண்டும் பிழைத்தெழுந்து பள்ளிக்குத் திரும்புவேன் என்று என் பள்ளியில் உள்ளவர்கள் நம்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்!' என்று என் மகன் சொல்ல ஆரம்பித்து விட்டான். நீங்கள் வந்து சென்ற நாளிலிருந்து, தான் பிழைத்துக் கொள்வோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என் மகனுக்குப் பிறந்துவிட்டது. இந்த ஒரு வாரத்தில் அவனிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டு டாக்டர்களே ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். எல்லாம் நீங்கள் செய்த அற்புதம்" என்று அந்தத் தாய் கண்ணீரோடு சொல்லச் சொல்ல, அந்த இளம்பெண்ணின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இந்த இளம் பெண்ணின் அனுபவத்தை இவ்வளவு விவரமாக நான் கூறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. ஒருவர் குணம் அடைவது, அவர் உள்மனதில் எழும் நம்பிக்கையில் ஆரம்பமாகிறது என்ற உண்மை, இக்கதையில் வெளிச்சமாகிறது. இதையே இன்றைய ஞாயிறு வாசகங்களும் நமக்குச் சொல்லித் தருகின்றன.

நமது நோய்கள் குணமாவதற்குக் காரணங்கள் என்னென்ன? மருந்து, மாத்திரை, மருத்துவ சிகிச்சை இவற்றால் மட்டும் ஒருவர் குணமாக முடியாது. குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி. அந்த நம்பிக்கை ஒருவர் மனதில் தோன்றுவதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. இவற்றில் எதிர்பாராத வழிகளும் இருக்கும். தீக்காயங்களுடன் போராடி, மனம் வெறுத்து மரண வாயிலை நெருங்கிவிட்ட அச்சிறுவனுக்கு, கணக்குப்பாடம் சொல்லித் தரவந்த ஆசிரியர், அவரையும் அறியாமல், குணமாகும் வழியைக் காட்டவில்லையா? அதுபோல...

குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதபோது, நலமடைவது கடினமாகிப் போகிறது. முடிவில் இயலாமலும் போகலாம். நம்பிக்கையற்ற நிலையில் நமக்குள் உருவாகும் மன அழுத்தங்களை இன்றைய முதல் வாசகம் நமக்குக் காட்டுகிறது. யோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசகம், துன்பங்களால் நொறுங்கிப்போன ஒருவரது உள்ளத்திலிருந்து எழும் அவலக் குரலாய் ஒலிக்கிறது.

யோபு 7: 1-4, 6-7

மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே?... இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன்.

இப்போது  நாம் கேட்ட இந்த வரிகளை நம்மில் பலர், பலநேரங்களில், பலவிதங்களில் சொல்லியிருக்கிறோம். துன்பங்கள் நம் வாழ்வை நிரப்பும்போது, நம்மிடமிருந்து முதலில் விடைபெறுவன உணவும், உறக்கமும்.

உணவையும், உறக்கத்தையும் இழந்துத் தவிக்கும் பல கோடி மக்களின் உணர்வுகளோடு நம்மையே இணைத்துக்கொள்ள பிப்ரவரி 8, இஞ்ஞாயிறு, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். பிப்ரவரி 8ம் தேதி, புனித ஜோசப்பின் பக்கித்தா அவர்களின் திருநாள். அடிமை வாழ்வின் கொடுமைகளால் இளவயதில் துன்புற்று, பின்னர், இறைவனின் பணியில் தன்னை அர்ப்பணித்த பக்கித்தா அவர்களின் திருநாளை 'மனித வர்த்தகத்திற்கு எதிராக  விழிப்புணர்வும், செபமும் மேற்கொள்ளும் உலகச் செப நாளா'கக் (The International Day of Prayer and Awareness against Human Trafficking) கடைபிடிக்கும்படி தாய் திருஅவை நம்மை அழைக்கிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ம் ஆண்டு, சனவரி முதல் தேதி, "நாம் அனைவரும் உடன்பிறப்புக்கள்; இனி எவரும் அடிமை இல்லை" என்ற மையக் கருத்துடன் உலக அமைதி நாள் செய்தியை வெளியிட்டார். இந்த எண்ணத்தின் தொடர்ச்சியாக, 'மனித வர்த்தகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் உலகச் செப நாள்' அறிவிக்கப்பட்டுள்ளது.  

திருஅவை வரலாற்றில் முதன்முதலாகச் சிறப்பிக்கப்படும் இந்த உலகச் செப நாளைக் குறித்து, திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசியபோது,

"உலகெங்கும் அதிர்ச்சியூட்டும் அளவு பரவியுள்ள இந்தச் சமுதாயக் கொடுமையைத் தீர்க்கவேண்டுமெனில், உலக நாடுகள் அனைத்தும் இணைந்து முயற்சி எடுக்கவேண்டும். இக்கொடுமையைப் பற்றிய விழிப்புணர்வே, இந்த முயற்சிகளின் ஆரம்பம். இந்த விழிப்புணர்வின் பயனாக நாம் எழுப்பும் செபங்கள், இக்கொடுமையை அனுபவிக்கும் பல கோடி மக்களுடன் நம்மை இணைத்துக்கொள்ள உதவும். விழிப்புணர்வு, செபம், துன்புறுவோருடன் இணைதல் ஆகிய முயற்சிகளால், இக்கொடுமையை முற்றிலும் ஒழிக்கும் செயல்கள் உருவாகும்" என்று இந்த உலக செப நாளின் நோக்கத்தை விளக்கினார்.

நாம் இன்று இறைவனிடம் மூன்று வரங்களுக்காக மன்றாடுவோம்.

முதன்முறையாக இந்த உலக செபநாளை அறிமுகப்படுத்தும் கத்தோலிக்கத் திருஅவை, உலக மக்கள் அனைவரும் இணைந்து பயன்படுத்தக்கூடிய ஒரு மன்றாட்டை நமக்கு வழங்கியுள்ளது. இந்த ஞாயிறு சிந்தனையின் இறுதியில், நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து, மனித வர்த்தகத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்காக நம் மன்றாட்டை இறைவனிடம் எழுப்புவோம்:

"இறைவா, உலகில் பல குழந்தைகளும், வயது வந்தவர்களும், பாலியல் வன்கொடுமைகள், கட்டாயத் தொழில், உடல் உறுப்பு தானம் ஆகிய பல கொடுமைகளுக்கு, பொய்யான, ஏமாற்று வழிகளில் பலியாகின்றனர் என்பதை அறியும்போது, நாங்கள் வேதனைப்படுகிறோம். இவர்களின் மாண்பும், உரிமையும் பறிக்கப்படுவதை அறிந்து, எங்கள் மனங்கள் கோபமடைகின்றன. இக்கொடுமைகளை உலகிலிருந்து முற்றிலும் அழிப்பதற்கு, புனித பக்கித்தாவுடன் இணைந்து நாங்களும் செபிக்கிறோம்; இந்த அநீதிக்கு எதிராக, குரல் எழுப்புகிறோம். தங்கள் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றால் காயமுற்றிருக்கும் மக்களுடன் எங்களை இணைக்கிறோம். அவர்களை அன்பாலும், நன்மைகளாலும் நிறைப்பதற்கு எங்களுக்குத் தேவையான அறிவொளியைத் தந்தருளும். இக்கொடுமைகளைச் செய்வோரை வெறுங்கையராய் அனுப்பிவிடும்; அவர்கள் தங்கள் தீமைகளிலிருந்து மனம் திருந்தி வாழச் செய்தருளும். உமது குழந்தைகளுக்குரிய விடுதலையை நாங்கள் அனைவரும் பெறுவதற்கு உதவியருளும். ஆமென்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.