2015-02-06 15:28:00

கிறிஸ்தவர்களின் மறைசாட்சிய வாழ்வு இன்றும் தொடருகின்றது


பிப்.06,2015. கிறிஸ்தவர்கள் மறைசாட்சிகளாக மரணமடைவது கடந்தகால நிகழ்வு மட்டும் அல்ல, இன்றும் இயேசு கிறிஸ்துவை வெறுக்கும் மக்களால் எண்ணற்ற கிறிஸ்தவர்கள் மறைசாட்சிகளாக மரணமடைகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித திருமுழுக்கு யோவானின் வாழ்வு மற்றும் மரணம் பற்றிய ஆழமான சிந்தனைகளை, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் பகிர்ந்துகொண்டபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விசுவாசத்தை வெறுப்பவர்களால் இந்த 2015ம் ஆண்டில் கொலைசெய்யப்பட்டுவரும்   ஆண்கள், பெண்கள் மற்றும் சிறாரை நினைப்போம் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, புனித திருமுழுக்கு யோவான் அவர்களை, “பெரிய யோவான்” என்றும் அழைத்தார்.

புனித திருமுழுக்கு யோவான் அவர்களது வாழ்வு, கடவுளை அறிவிப்பதற்காக இரத்தத்தைச் சிந்தும் பல கிறிஸ்தவர்களுக்கு ஓர் உவமையாக உள்ளது என்றும் கூறிய திருத்தந்தை, இப்புனிதர் தமது அழைப்பை ஒருபோதும் மறுதலித்ததில்லை, மெசியாவை அறிவிக்க வேண்டும் என்ற தமது கடமையை இவர் உணர்ந்தே இருந்தார் என்றும் கூறினார்.  

புனித திருமுழுக்கு யோவான் அவர்கள் கொலையுண்ட நிகழ்வு பற்றி வாசிக்கும்போது, தங்களின் வீடுகளிலிருந்து வெளியே இழுத்துவரப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாகி, கொலைசெய்யப்படும் இக்கால நம் மறைசாட்சிகளை முதலில் நினைக்கின்றேன், எனவே கிறிஸ்தவர்களின் மறைசாட்சியம் கடந்தகால நிகழ்வு மட்டும் அல்ல, இன்றும் தொடருகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1600ம் ஆண்டில் மறைசாட்சி வாழ்வை ஏற்ற பவுல் மீகி அவர்களை இன்று நினைவுகூருகின்றோம், யாரும் தங்களின் வாழ்வை வாங்க முடியாது, நாம் அனைவரும் விரும்பியோ, விரும்பாமலோ வாழ்வின் முடிவுப்பாதையில் பயணம் செய்துகொண்டிருக்கிறோம் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.