2015-02-06 16:00:00

இந்தியா-சமூக நல்லிணக்கத்துக்கு ஆயர்கள் மெழுகுதிரி ஊர்வலம்


பிப்.06,2015. இந்தியாவின் அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது குறித்த தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.

CCBI என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் 140 ஆயர்கள் பங்களூருவில் 27 வது ஆண்டுக் கூட்டத்தை நடத்திவரும் இவ்வேளையில், இவ்வெள்ளி மாலையில் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

இந்த அறிக்கையில், CCBI ஆயர்கள் பேரவையின் தலைவர் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், டெல்லி பேராயர் அனில் கூட்டோ, பங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ் ஆகிய மூவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், நாட்டில், அமைதியும் சமூக நல்லிணக்கமும் ஏற்படுவதற்குச் செபித்து மெழுகுதிரி அமைதி ஊர்வலத்தை இவ்வெள்ளி மாலையில் பங்களூருவில் 140 ஆயர்களும் தலைமையேற்று நடத்தினர்.

நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் கலந்துகொண்ட இந்த அமைதி ஊர்வலம், கோரமங்கல புனித ஜான் மருத்துவக் கல்லூரியிலிருந்து மாடிவாலா புனித அந்தோணியார் திருத்தலத்தில் நிறைவடைந்தது.

புனித அந்தோணியார் திருத்தலத்தில் உலகில் அமைதியும் சமூக நல்லிணக்கமும் ஏற்பட செபித்த பின்னர் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், டெல்லி பேராயர் அனில் கூட்டோ, பங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ் ஆகிய மூவரும் உரை நிகழ்த்தினர்.

பங்களூருவில் இம்மாதம் 3ம் தேதி தொடங்கிய இக்கூட்டம் 9ம் தேதி நிறைவடையும்.

மேலும், இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்து பேசிய இந்தியா மற்றும் நேபாளத்துக்கான திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பெனாக்கியோ அவர்கள், இந்தியத் திருஅவை சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்து பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடுமாறு வலியுறுத்தினார்.

ஆதாரம் : Ind.Sec /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.