2015-02-06 15:20:00

இத்தாலி குடியேற்றதாரரை வரவேற்பதற்கு திருத்தந்தை நன்றி


பிப்.06,2015. இத்தாலியக் கடற்கரைகளில் அண்மையில் வந்திறங்கிய குடியேற்றதாரர் பலரை வரவேற்று ஏற்றுள்ளதற்கு அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் பல்வேறு நகரங்களின் அரசு அதிகாரிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் தேசிய நிர்வாகத்துக்கும், உள்ளூர் சமூகங்களுக்கும் இடையே நல்ல ஒரு தொடர்பை உருவாக்குவதில் நகராட்சி அதிகாரிகள் முக்கியமான பங்கை ஆற்றி வருகின்றனர்  என்று கூறினார்.

குடியேற்றதாரர் விவகாரத்தில் இத்தாலி எதிர்கொண்டுள்ள பல அவசரகாலப் பணிகள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இவ்விவகாரத்தில் நாட்டின் சட்டத்தை அமல்படுத்துவது, தனிமனிதரின் மனித உரிமைகளை மதிப்பது, இவை இரண்டுக்குமிடையே சமநிலையுடன் செய்லபடுவதற்குரிய சவாலையும் அரசு அதிகாரிகள் எதிர்கொள்வதையும் சுட்டிக்காட்டினார்.

குடியேற்றதாரர் வந்திறங்கும் அந்தந்தப் பகுதி மறைமாவட்டங்கள் மற்றும் பங்குத்தளங்களுடன் அரசு அதிகாரிகள் கொண்டிருக்கும் சிறந்த ஒத்துழைப்பு பற்றியும் பாராட்டிப் பேசிய திருத்தந்தை, கல்வி மற்றும் பிற சமூகநலத் திட்டங்கள் மூலம் மனித வளர்ச்சிக்கும், நாட்டின் பொதுநலனை முன்னேற்றவும் நல்ல வழிகளைத் தேடுமாறும் கேட்டுக்கொண்டார்.

2014ம் ஆண்டில் மத்தியதரைக் கடல் வழியாக ஏறக்குறைய ஒரு இலட்சத்து எழுபதாயிரம் குடியேற்றதாரர் இத்தாலியக் கடற்கரைகளில் வந்திறங்கினர் என்று அனைத்துலக குடியேற்றதாரர் நிறுவனத்தின்(IOM) கணக்கெடுப்பு கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.