2015-02-05 15:35:00

திருஅவை, ஏழ்மையில் நற்செய்தியைப் பறைசாற்றவேண்டும்


பிப்.05,2015 கத்தோலிக்கத் திருஅவை, ஏழ்மையில் நற்செய்தியைப் பறைசாற்றவேண்டும் என்றும், நற்செய்தியைப் பறைசாற்றுவது மனித சக்தியால் அல்ல, தூய ஆவியாரின் சக்தியால் நிகழவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருப்பலி ஆற்றியத் திருத்தந்தை, நற்செய்தியை அறிவிப்பவர்களின் முதன்மையான குறிக்கோள், வறியோரின் துயரங்களைத் துடைப்பதாகும் என்று எடுத்துரைத்தார்.

மாற்கு நற்செய்தியில் (மாற்கு 6: 7-13) இயேசு தன் சீடர்களைப் பணி செய்வதற்கு அனுப்பி வைத்த நிகழ்வை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குணமாக்குதல், உயர்த்துதல், விடுவித்தல் ஆகிய மூன்றும், அருள் பணியின் முக்கிய அம்சங்கள் என்று குறிப்பிட்டார்.

போர்க்களத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு மருத்துவமனை போல திருஅவை விளங்கவேண்டும் என்று தான் ஏற்கனவே கூறியிருந்த ஓர் உருவகத்தை மீண்டும் நினைவுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காயப்பட்டிருக்கும் இவ்வுலகில், திருஅவையின் குணப்படுத்தும் பணிக்காகக் காத்திருப்பவரின் எண்ணிக்கை மிகப் பெரிது என்று சுட்டிக் காட்டினார்.

வறியோருக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியை இறைவனிடமிருந்து பெற்று அவரது கருவியாகச் செயலாற்றவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இதனை மறந்து செயலாற்றும்போது, சக்திமிகுந்த ஓர் அரசு சாரா அமைப்பைப் போல மாறிவிடும் ஆபத்து திருஅவைக்கு உள்ளது என்பதையும் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.