2015-02-05 15:57:00

கிறிஸ்தவர்களின் அமைதியான ஊர்வலத்தில் டில்லி காவல்துறை தடியடி


பிப்.05,2015. கிறிஸ்தவ ஆலயங்களைச் சேதப்படுத்திய வன்முறைகளுக்கு எதிராக டில்லியில் இவ்வியாழனன்று போராட்டம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"இதுவரை நடந்தது போதும்" என்ற கருத்துக்கள் அடங்கிய வாசகங்களைத் தாங்கி, அமைதியான முறையில், தூய இருதயப் பேராலயத்திற்குமுன் கூடியிருந்த 500க்கும் மேற்பட்டவர்கள்மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று, டில்லி உயர்மறைமாவட்டம் சார்பில் பேசிய அருள்பணி சவரிமுத்து சங்கர் கூறினார்.

செபங்கள் சொல்லியும், பாடல்கள் பாடியும் பேராலயத்திற்குமுன் கூடியிருந்தோர் மீது தகுந்த காரணம் ஏதுமின்றி காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டனர் என்றும், பெண்கள் மற்றும் முதியோர் மீதும் அவர்கள் கடுமையாக நடந்துகொண்டனர் என்றும் அருள்பணி சவரிமுத்து கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களில் டில்லி நகரில் மட்டும் ஐந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்றும், இறுதியாக நடந்த வன்முறை பிப்ரவரி 2 இத்திங்களன்று நடைபெற்றது என்றும் இந்திய கிறிஸ்தவ சபைகளின் தேசியக் குழுவைச் சேர்ந்த சாமுவேல் ஜெயக்குமார் அவர்கள் UCAN செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : UCAN/AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.