2015-02-04 16:27:00

போதைப்பொருள், ஆயுத விற்பனைகளுக்கு அடுத்தபடியாக மனித விற்பனை


பிப்.04,2015 சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் போதைப்பொருள், ஆயுதங்கள் விற்பனைகளுக்கு அடுத்தபடியாக, மனித விற்பனை இவ்வுலகில் நிலவிவருகிறது என்று ஆசிய ஆயர்கள் பேரவையின் தலைவர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

மனித வர்த்தகத்திற்கு எதிரான முதல் உலக செப நாள் பிப்ரவரி 8 வருகிற ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, ஆசிய செய்திக்கு அனுப்பிய ஒரு செய்தியில் மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

சூடானிலிருந்து அடிமையாக விற்கப்பட்டு, பின்னர் இத்தாலியில் ஒரு அருள் சகோதரியாகப் பணியாற்றி இறையடி சேர்ந்த புனித ஜோசப்பின் பக்கிட்டா அவர்களின் திருநாளான பிப்ரவரி 8ம் தேதியன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான முதல் உலக செப நாள் கடைபிடிக்கப்படுவதைக் குறித்து, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் மகிழ்வை வெளியிட்டார்.

அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களில் சிக்கியிருக்கும் பல கோடி மக்களுக்கு புனித ஜோசப்பின் பக்கிட்டா அவர்களின் நம்பிக்கையும், இறைபற்றும் பெரும் உந்து சக்தியாக அமையும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

மனித வர்த்தகத்திற்கு எதிரான முதல் உலக செப நாளையொட்டி, மும்பை உயர்மறைமாவட்டமும், ஆசியத் திருஅவையும் சனவரி 30ம் தேதி முதல் நவநாள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.