2015-02-04 16:35:00

நோயுற்றோர் உலக நாளுக்கு சுவிஸ் ஆயர்கள் வெளியிட்டுள்ள செய்தி


பிப்.04,2015 கடும் நோயில் துன்புறுவோர் வாழத் தகுதியற்றவர்கள் என்று இவ்வுலகம் கூறுவது பெரும் பொய் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்றோர் உலக நாளுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதைப் பாராட்டி, சுவிஸ் நாட்டு ஆயர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளனர்.

பிப்ரவரி 11, புனித லூர்து அன்னைத் திருநாளன்று சிறப்பிக்கப்படும் 23வது நோயுற்றோர் உலக நாளையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள செய்தியை மையப்படுத்தி, சுவிஸ் நாட்டு ஆயர்கள் சார்பில் ஆயர் Marian Eleganti அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

பல வேளைகளில், தீராத நோய் கொண்டவர்கள், கடவுளோடும், பிறரோடும் ஒப்புரவு கொள்ள அவர்களது நோய் ஒரு காரணமாக அமையக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஆயர்களின் இச்செய்தி, தீராத நோய் கொண்டோரின் வாழ்வை முடிப்பதற்கு இவ்வுலகம் காட்டும் ஆர்வத்தைக் கண்டனம் செய்துள்ளது.

அதேபோல், நோயுற்றோரைச் சுற்றியிருப்போரும் இத்தருணங்களில் காட்டும் பொறுமையும், ஆதரவும் பல நன்மைகளை விளைவிக்கும் வல்லமை கொண்டவை என்றும் சுவிஸ் நாட்டு ஆயர்களின் செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.