2015-02-04 15:55:00

சிறுபான்மை மக்களின் வாக்குகளால் இலங்கையில் புதிய அரசு


பிப்.04,2015 இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் வாக்குகளாலேயே புதிய அரசு உருவானது என்று இலங்கையின் புதிய அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 4, இப்புதனன்று கொண்டாடப்பட்ட இலங்கை சுதந்திர நாளையொட்டி, ரூபவாஹினி தேசியத் தொலைக்காட்சியில் அரசுத் தலைவர் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

நன்னெறி விழுமியங்களின் அடிப்படையில் அரசு அமைவதை விரும்பித் தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் என்று அரசுத் தலைவர் சிறிசேன எடுத்துரைத்தார்.

மேலும், அதிகப்படியான மரியாதையோடு தன்னையும், தன் மனைவியையும் அழைப்பதைத் தவிர்த்து, தங்களை திரு, அல்லது திருமதி சிறிசேன என்று அழைப்பதையே தான் விரும்புவதாகவும் அரசுத் தலைவர் சிறிசேன அவர்கள் கூறினார்.

அதேபோல், முக்கியமான அரசு நிகழ்வுக்கு மட்டுமே தான் ஹெலிகாப்டர் போன்ற அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தப்போவதாகவும், அரசுத் தலைவருக்குச் சொந்தமான இருப்பிடங்களில் பல பொது நலனுக்கென பயன்படுத்தபடும் என்றும் அரசுத் தலைவர் சிறிசேன அவர்கள் கூறினார்.

நாட்டில் நிகழ்ந்த அமைதியான அரசு மாற்றத்திற்கு, புத்த மதத் துறவிகள், கத்தோலிக்க அருள் பணியாளர்கள் மற்றும் பக்தி நிறைந்த அனைத்து மக்களும் இணைந்து வேண்டிக் கொண்டதற்காகவும் அரசுத் தலைவர் சிறிசேன அவர்கள் தன் உரையில் நன்றி தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.