பிப்.03,2015. “நாம் அனைவரும் பாவிகள், மனம் மாற்றம் பெற நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்” என்ற வார்த்தைகளை இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்திங்களன்று லித்துவேனிய ஆயர்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லித்துவேனிய வரலாற்றில் திருஅவைக்கு எதிராக இடம்பெற்ற கடும் அடக்குமுறைகளின்போது துணிச்சலுடன் செயல்பட்ட ஆயர்கள் வரலாற்றின் வாரிசுகள், பிறரன்பு மேய்ப்புப்பணியின் சொத்துக்கள் என்று பாராட்டினார்.
அட் லிமினா சந்திப்பில் லித்துவேனிய ஆயர்களை இவ்வாறு பாராட்டிய திருத்தந்தை, இக்காலத்திய நவீன உலகப்போக்கு மற்றும் ஒருசார்பு கோட்பாட்டின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் ஆயர்கள் துணிந்து செயல்படுவதை ஊக்கப்படுத்தியதோடு, இந்த அச்சுறுத்தல்களிலிருந்து திருஅவையைத் தொடர்ந்து காப்பாற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
விசுவாசிகளின் குடும்ப வாழ்வில் அக்கறை காட்டுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
ஆயர்கள், தங்களின் இளமையோடும், இளமைத் துணிச்சலோடும் உரோமைக்கு வந்துள்ளனர் என்றும் கூறிய திருத்தந்தை, குருத்துவ மற்றும் அர்ப்பண வாழ்வுக்கு இறையழைத்தல்கள் அதிகரிப்பதற்குச் செபிக்கும்போது ஒருபோதும் சோர்வுக்கு இடம்தர வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
1940களில் முன்னாள் சோவியத் யூனியன் ஆக்ரமித்த இரண்டாவது நாடாகிய லித்துவேனியா மிகக் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளானது. திருஅவை சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன, 150க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் கைது செய்யப்பட்ட்னர், நாடுகடத்தப்பட்டு சித்ரவதைகளுக்கு உள்ளாகினர் மற்றும் Telsiai ஆயர் Vincentas Borisevicius தூக்கிலிடப்பட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |