2015-02-03 15:52:00

நற்செய்தியை தினமும் தியானிப்பது நம்பிக்கை வாழ்வுக்கு உதவும்


பிப்.03,2015. தொலைக்காட்சிகளைப் பார்ப்பதில் அல்லது பிறர் பேசும் புறணிகளைக் கேட்டுக்கொண்டிருப்பதில் நேரத்தை வீணாக்காமல் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் நற்செய்தியை எடுத்து வாசிக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எபிரேயருக்கு எழுதப்பட்ட இந்நாள் திருப்பலியின் முதல் வாசகத்தை (எபி.12,1-4) மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில், நற்செய்தியை தினமும் தியானிப்பது இயேசுவில் உண்மையான நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு உதவுகின்றது என்று கூறினார்.

இயேசுவின்மீது நம் கண்களைப் பதிப்பது நம்பிக்கையின் மையமாக உள்ளது என்றும்,  தினமும் செபமாலை செபிப்பது, பிரச்சனை இருக்கும்போது நம் ஆண்டவருடன் அல்லது நம் அன்னை மரியாவிடம் அல்லது புனிதர்களிடம் பேசுவது நல்லது, ஆனால் அன்றாட தியானம் முக்கியம், இது நற்செய்தியை நம் கையில் வைத்துக்கொள்வதாலே இயலும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்றாடம் வாசிக்கும் நற்செய்திப் பகுதியிலிருந்து எப்படி தியானிப்பது என்பதையும் மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் குணமடைந்தது, தொழுகைக்கூடத் தலைவர் யாயீர் என்பவரின் மகளுக்கு உயிரளித்தது (இன்றைய நற்செய்தி வாசகம் மாற்கு 5,21-43)  ஆகிய பகுதிகளை எவ்வாறு தியானிப்பது என்பதையும் எடுத்துச் சொன்னார்.

தியானத்துடன் செபிப்பது நாம் நம்பிக்கையில் வளர உதவுகின்றது, தினமும் வீட்டில் நற்செய்தியில் ஒரு பகுதியை எடுத்து 15 நிமிடங்கள் வாசித்து அதனைக் கற்பனை செய்து, அது பற்றி இயேசுவோடு பேசுமாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.