2015-02-03 16:15:00

திருவழிபாட்டு வாழ்வை உயிரூட்டமாக்குவதற்கு ஆயர்கள் ஆய்வு


சன.03,2015. திருவழிபாடு நாம் செபிக்கும் முறையாகும், எனவே செபங்கள், இன்னும் உயிரூட்டமுள்ளதாகவும், அனைவரும் பங்கு கொள்வதற்கு ஏற்றதாகவும் அமைய வேண்டுமென மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

பங்களூருவில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் (CCBI) 27வது ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் தலைப்புகள் பற்றி, இப்பேரவையின் தலைவரான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் பத்திரிகையாளர் கூட்டத்தில் விவரித்தபோது இவ்வாறு கூறினார்.

இந்தியாவின் 131 இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களைச் சார்ந்த ஆயர்கள் பங்குபெறும் இக்கூட்டத்தை இந்திய திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

மேலும், பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய CCBI பேரவையின் பொதுச் செயலரான கோழிக்கோடு ஆயர் வர்க்கீஸ் சக்கலக்கள் அவர்கள், திருவழிபாடு என்பது வெறும் சடங்குமுறை அல்ல, ஆனால் இது மக்களை இறைவனிடம் இட்டுச் செல்லவும், உறவுகளைக் கட்டியெழுப்பவும் உதவ வேண்டுமெனவும் கூறினார்.

இந்த ஒரு வாரக் கூட்டத்தில் 140 ஆயர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : CCBI/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.