2015-02-03 14:44:00

அடுத்தவர் கண்ணில் துரும்பு...


தன் மனைவியின் கேட்கும்திறன் குறைந்துவருவதாகக் கவலைப்பட்ட கணவர், குடும்ப மருத்துவரை தனியே சந்திக்கச் சென்றார். மருத்துவர் கணவரிடம் ஓர் ஆலோசனை தந்தார். "நீங்கள் வீட்டில் இருக்கும்போது, 30 அடி தூரத்திலிருந்து சாதாரணக் குரலில் உங்கள் மனைவியிடம் ஏதாவது கேளுங்கள். அவர் அதற்குப் பதில் சொல்லவில்லையெனில், 20 அடி தூரத்திலிருந்து மீண்டும் கேளுங்கள். பின்னர், 10 அடி, 5 அடி என்று தூரத்தைக் குறைத்துக்கொண்டு, அதே கேள்வியைக் கேளுங்கள்" என்று மருத்துவர் சொல்லி அனுப்பினார்.

அன்று மாலை, மனைவி சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார். கணவர் ஹாலில் இருந்தபடியே, "கமலா, இன்று இரவு உணவுக்கு என்ன செய்திருக்கிறாய்?" என்று சாதாரண குரலில் கேட்டார். மனைவியிடமிருந்து எந்த பதிலும் வராததால், டாக்டர் சொன்னபடி, இன்னும் சிறிது அருகில் சென்று, மீண்டும் இருமுறை அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் பதில் ஏதும் மனைவியிடமிருந்து வராததால், கணவர் வெகுவாகக் கவலை கொண்டார்.

இறுதியாக, சமையலறை வாசலில் நின்று, "கமலா, என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று மீண்டும் கேட்டார். மனைவி திரும்பாமல் சமைத்தபடி இருந்தார். பதில் ஏதும் வரவில்லை. மனைவிக்கு மிக அருகில் சென்று, பின்புறம் நின்று, "இன்று இரவு உணவுக்கு என்ன செய்திருக்கிறாய்?" என்று குரலை உயர்த்திக் கேட்டபோது, மனைவி அவரிடம் திரும்பி, "இரவு உணவுக்கு சப்பாத்தி செய்திருக்கிறேன். இதை நான் ஐந்தாவது முறையாகச் சொல்லிவிட்டேன், போதுமா?" என்று சப்தமாகச் சொன்னார்.

அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை எளிதாகக் காணும் நாம், நம் கண்ணில் உள்ள மரக்கட்டையைக் காணத் தவறுகிறோம். (மத்தேயு 7:3)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.