2015-02-03 15:22:00

பேராயர் ரொமெரோ அருளாளராக உயர்த்தப்பட திருத்தந்தை ஒப்புதல்


சன.03,2015. சான் சால்வதோர் மறைசாட்சி பேராயர் ஆஸ்கார் ரொமெரோ உட்பட ஐந்து இறையடியார்களை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு இச்செவ்வாயன்று இசைவு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரின் Ciudad Barrios என்ற ஊரில் 1917ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்த, சான் சால்வதோர் பேராயர் Oscar Arnolfo Romero Galdámez அவர்கள், கிறிஸ்தவ விசுவாசத்துக்காக 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். எல் சால்வதோரில் 1980ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டுவரை நடந்த உள்நாட்டுப் போரின்போது இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொதுப்படையாக கண்டித்துப் பேசியவர் பேராயர் ரொமெரோ. பேராயர் ரொமெரோ அவர்கள் குறித்த விபரங்கள் இப்புதனன்று வத்திக்கானில் பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்படும். 

மேலும், தென் அமெரிக்க நாடான பெருவில் 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதிக்கும் 25க்கும் இடைப்பட்ட நாள்களில், மறைமாவட்ட அருள்பணியாளர் Alessandro Dordi,  பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணியாளர்கள் Michele Tomaszek, Sbigneo Strzałkowski ஆகிய மூவரும் கிறிஸ்தவ விசுவாசத்துக்காக மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.

இன்னும், இத்தாலியின் Bisacquinoவில் 1880ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்த இறையடியார் அருள்பணியாளர் Giovanni Bacile அவர்கள் 1941ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி இறந்தார். இவரது வீரத்துவமான வாழ்வையும் ஏற்று முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் தெரிவித்தார் திருத்தந்தை.

புனிதர்நிலைக்கு உயர்த்தும் திருப்பேராயத் தலைவர் கர்தினால் Angelo Amato அவர்களை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஐந்து இறையடியார்களை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.