2015-02-02 16:02:00

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பள்ளி மீது தாக்குதல்


பிப்.02,2015. பிரான்ஸ் நாட்டின் Charlie Hebdo பத்திரிகைக்கு எதிராக ஏறத்தாழ 300 பாகிஸ்தான் முஸ்லீம் மாணவர்கள் கூடிவந்தபோது, பாகிஸ்தான் கிறிஸ்தவப் பள்ளி ஒன்றைத் தாக்க முனைந்துள்ளனர்.

இஸ்லாம் மதத்திற்கு எதிராக கேலிச் சித்திரங்களை வரைந்த பிரெஞ்ச் இதழைக் கண்டிக்கும் நோக்குடன், இரும்புக் கம்பிகளைத் தூக்கிவந்த பாகிஸ்தான் முஸ்லீம் மாணவர்கள், பாகிஸ்தானின் Bannu என்ற நகரில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆண்கள் பள்ளிக்குள் நுழைந்து, அப்பள்ளி மூடப்படவேண்டும் என கட்டளையிட்டனர்.

இந்தத் தாக்குதலின்போது கிறிஸ்தவ பள்ளியின் நான்கு மாணவர்கள் காயமடைந்ததுடன், பள்ளியும் இரண்டு நாட்கள் மூடப்பட்டது.

பாகிஸ்தான் சுதந்திரமடைந்து 67 ஆண்டுகள் ஆகியும், இன்னும் அந்நாட்டு கிறிஸ்தவர்கள் பாகிஸ்தான் குடிமக்களாக நோக்கப்படாமல், மேற்கத்திய நாடுகளின் நண்பர்களாக நோக்கப்படுவது கவலை தருவதாக உள்ளது என அரசு சாரா அமைப்பொன்றின் இயக்குனர் நசீர் சயீது தெரிவித்தார்.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.