2015-02-02 15:39:00

திருத்தந்தையின் மூவேளை செப உரை


பிப்.02,2015. நற்செய்தியின் வார்த்தைகள் நம்மைக் கட்டுப்படுத்துபவை அல்ல, மாறாக நம்மைத் தீமைகளிலிருந்தும் உலகு சார்ந்த ஆசைகளிலிருந்தும் விடுவிக்க உதவுபவை என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கப்பர்நகூம் செபக்கூடத்தில் இயேசு போதித்த நிகழ்வைக் கூறும் இஞ்ஞாயிறு வாசகத்தை மையப்படுத்தி ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் வார்த்தையான நற்செய்தி நம்மை கட்டுப்படுத்துவதில்லை, மாறாக நமக்கு விடுதலை வழங்குகிறது என்றார்.

ஊருக்குள் தன் சீடர்களுடன் சென்ற இயேசு, இறைவார்த்தையை மக்களுக்கு அறிவிக்கவேண்டியதன் முக்கியத் தேவையை உணர்ந்ததாலேயே செபக்கூடத்தினுள் நுழைந்தார் என்ற திருத்தந்தை, அவர் இறைவார்த்தையை அதிகாரத்தோடுப் போதித்தது மக்களுக்கு பெரும் ஆச்சரியமளிப்பதாக இருந்தது என்றார்.

இறைவார்த்தை என்பது இறைவிருப்பதோடு தொடர்புடையது என்பதால், தான் சொல்வதை அவ்வார்த்தை நிறைவேற்றுகின்றது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உண்மைக்கு புறம்பான, பயனற்ற வார்த்தைகளை நாம் பேசிவருகிறோம் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீட்கும் வல்லமையுடைய இயேசுவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும்  மறைபோதகர்களாக கிறிஸ்தவர்கள் செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

நம் வாழ்வை மாற்றும் சக்தி நற்செய்திக்கு உண்டு என்பதை நாம் மறக்கவேண்டாம் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை மாற்றுவதற்கு நற்செய்தியை நாம் அனுமதிக்கும்போதே நம்மில் மாற்றம் நிகழ்கிறது எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.