2015-01-31 16:36:00

பாகிஸ்தான்-சிறுபான்மைக் குழுக்களின் பாதுகாப்புக்கு அழைப்பு


சன.31,2015. பாகிஸ்தானில் சிறுபான்மை சமயக் குழுக்களை நீதித்துறையின் அநீதிகளிலிருந்தும் தீவிரவாதிகளின் தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கு அரசு உறுதியளிக்க வேண்டுமென Human Rights Watch என்ற அரசு சாரா அமைப்பின் புதிய அறிக்கை கூறுகிறது. 

பிரதமர் நவாஸ் ஷெரிப் அரசு, சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு உறுதியளிக்கத் தவறியுள்ளதையடுத்து, 2014ம் ஆண்டில் அந்நாட்டில் சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிரானத் தாக்குதல்கள் குறிப்பிடத்தகும் வகையில் அதிகரித்துள்ளன என்று அவ்வறிக்கை கூறுகிறது.  

பாகிஸ்தான் சிந்து (Sindh)மாநிலத்தில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், இவ்வெள்ளியன்று  பகலில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்து 61 பேர் பலியாகியுள்ளனர், மேலும் படுகாயமடைந்த 50 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் பலரின் நிலை கவலைக்கிடமாய் உள்ளதால், பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலரும் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.