2015-01-31 15:47:00

திருத்தந்தை -அன்னை பூமியைப் பயிரிட்டுப் பாதுகாப்போம்


சன.31,2015. ஒவ்வொரு கண்டத்திலும் மனிதருக்கு நல்ல உணவு உற்பத்தி செய்யப்படாமல் வாழ்வு இல்லாதது போன்று, இப்பூமியைப் பயிரிடுதல் இல்லாமல் மனித சமுதாயம் இல்லை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கூட்டமைப்பின் 200 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

மனிதர் வாழ்வில் வேளாண்மையின் முக்கியமான பங்கைச் சுட்டிக்காட்டிப் பேசிய  திருத்தந்தை, வறுமை மற்றும் பசி, நிலத்தைப் பயிரிட்டுப் பாதுகாத்தல் ஆகிய இரு கூறுகள் பற்றிக் குறிப்பிட விரும்புவதாகவும் கூறினார்.

இப்பூமியின் நலன்கள் இவ்வுலகினர் அனைவருக்கும் பொதுவானவை என்று 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுகிறது, ஆனால் இக்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார அமைப்பு, இந்த அறிவிப்பைச் சரியாகப் பயன்படுத்துவதிலிருந்து பலரை ஒதுக்கி வைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

சந்தை விதிகளை முழுமையாக்குதல், வீணாக்கும் கலாச்சாரம், உணவைக் கணக்கின்றி வீணாக்குதல் போன்றவை பல குடும்பங்களுக்குத் துன்பத்தையும், கவலையையும் வருவிக்கின்றன என்றுரைத்த திருத்தந்தை, உணவுத் தயாரிப்பு மற்றும் அதனை விநியோகம் செய்யும் அமைப்புமுறையில்  மறுபரிசீலனை தேவை என்றும் கூறினார்.

மனிதர் நிலத்தைப் பயிரிடுவதற்கு மட்டுமல்லாமல் அதனைப் பாதுகாப்பதற்கும் அழைப்பு பெற்றுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Coldiretti என்ற இத்தாலிய தேசிய விவசாயிகள் கூட்டமைப்பில், 19 மாநில மற்றும் 97 மாவட்ட கூட்டமைப்புகள் உள்ளன. மேலும், 15 இலட்சம் பேர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.