2015-01-31 15:53:00

இத்தாலியின் புதிய அரசுத்தலைவருக்கு திருத்தந்தை வாழ்த்து


சன.31,2015. இத்தாலியின் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Sergio Mattarella அவர்களுக்கு தனது வாழ்த்து தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Mattarella அவர்களுக்கு நல்வாழ்த்தையும் செபத்தையும் தெரிவித்துள்ளதோடு, நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் அவர் தனது பணியை அர்ப்பணிப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

இத்தாலிய மக்களின் உண்மையான மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்கு ஒத்துச்செல்லும் வகையில் பொதுநலனை முன்னேற்றும் செயல்களில் புதிய அரசுத்தலைவர் ஈடுபட இறைவன் அருள்புரிய வேண்டுமென்று தான் செபிப்பதாகவும், அனைவருக்கும் தனது ஆசீரை அளிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இச்சனிக்கிழமையன்று இத்தாலியின் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Sergio Mattarella அவர்கள், 1983 முதல் 2008ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் அரசியல் அமைப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியிருப்பவர். இத்தாலியின் சிசிலித் தீவைச் சார்ந்த 73 வயது புதிய அரசுத்தலைவர் Sergio Mattarella அவர்கள், 665 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.