2015-01-30 15:58:00

பேராயர்கள் தங்களின் மறைமாவட்டங்களில் பால்யம் பெறுவார்கள்


சன.30,2015. தலத்திருஅவைகளில் பேராயர்கள் கொண்டிருக்கும் பணியின் மதிப்பை உயர்த்திக் காட்டும் நோக்கத்தில், புதிய பேராயர்கள் தங்களின் சொந்த  மறைமாவட்டங்களில் பால்யம் பெறுவார்கள் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் புதிதாக நியமனம் பெறும் பேராயர்கள், புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவான ஜூன் 29ம் தேதியன்று வத்திக்கானில் திருத்தந்தையிடமிருந்து பால்யம் என்ற கழுத்துப்பட்டையை பெறும் நிகழ்வு, இவ்வாண்டிலிருந்து அந்தந்த தலத்திருஅவைகளில் நடைபெறும் என்று, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள் அறிவித்துள்ளார்.

கடந்த 32 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வந்த இந்த நிகழ்வு பற்றி வத்திக்கான் வானொலியில் பேசிய பேரருள்திரு மரினி அவர்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பேராயர்களுக்குத் தங்களின் தலத்திருஅவைகளோடு உள்ள உறவுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

அந்தந்த உயர்மறைமவாட்டங்களில் விசுவாசிகள் மற்றும் பிற ஆயர்கள் முன்னிலையில் நடைபெறும் திருவழிபாட்டில், திருப்பீடத் தூதர்கள், புதிய பேராயர்களுக்குப் பால்யத்தை அணிவார்கள் என்றும் கூறினார் பேரருள்திரு மரினி.

ஆயினும், ஜூன் 29ம் தேதியன்று வத்திக்கானில் நடைபெறும் பெருவிழாத் திருப்பலியில் புதிய பேராயர்கள் திருத்தந்தையுடன் சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுவார்கள் என்றும், அச்சமயத்தில் திருத்தந்தை பால்யங்களை ஆசீர்வதிப்பார் என்றும் அறிவித்தார் பேரருள்திரு மரினி.

முக்கிய திருவழிபாடுகளில் பேராயர்கள் கழுத்தில் அணியும் பால்யம், திருத்தந்தையுடன் அவர்கள் கொண்டிருக்கும் உறவையும், தங்களின் உயர்மறைமாவட்டங்களிலும், அதைச் சார்ந்த பிற மறைமாவட்டங்களிலும் பேராயர்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தையும் குறிக்கின்றது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.