2015-01-30 15:20:00

கடுகு சிறுத்தாலும்.. : நாம் செய்பவை திருப்தி தரவேண்டும்


ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகினார்.  அவர் சென்ற நேரம் அந்தச் சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையைச் செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதைக் கவனித்தார். உடனே பணக்காரர் ” இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காகச் செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார். சிற்பி சிரித்துக்கொண்டே “இல்லை ஐயா, கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார்

பணக்காரர் ஆச்சரியத்துடன் “என்ன சொல்றீங்க! மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்தச் சிலை, எந்தப் பாகமும் உடையக்கூட இல்லையே” எனக்கேட்டார்

 “அந்தச் சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி.

 “ஆமாம் ….அது சரி.. இந்தச் சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார் பணக்காரர்

 “இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை” என்று சொன்னார் சிற்பி

பணக்காரர் வியப்புடன்” நாற்பது அடி உயரத்தில் இந்த சின்னக் கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறீர்கள்?” என்றார்

 “அந்தச் சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே. எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே. அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன்” என்றார் சிற்பி.

நாம் செய்வது முதலில் நமக்கே மனத் திருப்தியைத் தருவதாக இருக்க வேண்டும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.