2015-01-30 16:21:00

இஸ்ரேலியக் குகையில் 55 ஆயிரம் ஆண்டு பழமையுடைய மண்டை ஓடு


சன.30,2015. மேற்கு கலிலேயாவிலுள்ள இஸ்ரேலியக் குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மண்டை ஓடு, ஒரு பெண்ணின் மண்டை ஓடாகவும், இது 55 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இக்கால மனிதர்கள் ஆப்ரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த விதம் குறித்து புதிய புரிதலை இம்மண்டை ஓடு ஏற்படுத்தியிருக்கிறது எனக் கூறும் அறிவியலாளர்கள், ஏறக்குறைய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதி வழியாக மனிதர்கள் இடம்பெயர்ந்து சென்று ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் வாழத் தொடங்கினார்கள் என்று கருதுகின்றனர்.

இந்த மண்டை ஓட்டின் பகுதியும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மண்டை ஓடு ஆரம்பகால ஐரோப்பியர்களை ஒத்திருந்தாலும், ஆப்ரிக்கர்களின் சில குணங்களையும் அது கொண்டிருப்பதாக இந்த மண்டை ஓட்டைக் கண்டறிந்த ஆய்வை தலைமை தாங்கி நடத்திய தெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் Israel Hershkovitz தெரிவித்துள்ளார்.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த புரிதலுக்கு இந்த மண்டை ஓட்டின் பகுதி ஒரு முக்கிய சான்று என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Neanderthal மனிதர்கள் எனப்படும் ஆதிமனிதர்களுடன் தற்போதைய மனித இனம் ஒன்றாக வாழ்ந்தனர் என்பதாகவும், இருதரப்பாரும் இணைந்து வாரிசுகளை உருவாக்கினார்கள் என்பதாகவும் முன்வைக்கப்படும் கருத்தை இந்த மண்டை ஓட்டின் ஒரு பகுதி ஆதரிப்பதாகவும் தெரிகிறது.

குறைந்தது அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறியுள்ளனர், ஆனால், ஐரோப்பாவில் சில பகுதிகளின் கடுமையான காலநிலையால் அம்மக்கள் அக்கண்டத்தில் ஏறக்குறைய 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் பரவினர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.   

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.