2015-01-30 15:46:00

இயேசுவோடு முதலில் இடம்பெற்ற சந்திப்பை மறக்கவே கூடாது


சன.30,2015. கிறிஸ்துவை முதல் முறையாகச் சந்தித்த நினைவையும், அச்சந்திப்பின்போது இருந்த ஆர்வத்தையும் இழந்துள்ள அரைகுறைக் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் சாத்தானை அனுமதிக்கும் பெரிய ஆபத்தில் உள்ளார்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவை முதல் முறையாகச் சந்தித்த நினைவையும், அவரில் வைத்திருக்கும் நம்பிக்கையையும் கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் உறுதியாக விடாமல் வைத்திருக்க வேண்டும், அப்படிச் செய்வது அவர்கள் தங்களின் விசுவாசத்தில் துணிச்சலுடன் முன்னோக்கிச் செல்ல உதவும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இவ்வெள்ளி காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், எபிரேயருக்கு எழுதப்பட்ட இந்நாளைய முதல் வாசகத்தை(எபி.10,32-39) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இயேசுவோடு முதலில் இடம்பெற்ற சந்திப்பை நினைவில் வைத்திராதவர்கள், வெறுமையானவர்கள் மற்றும் ஆன்மீக முறையில் செயலாற்றல் அற்றவர்கள், அரைகுறை மனிதர்களால் மட்டுமே இவ்வாறு இருக்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை. 

இயேசுவோடு இடம்பெற்ற முதல் சந்திப்பு ஒருபோதும் மறக்கப்படவே கூடாது என்றும், நாம் பெற்ற அருளை நினைத்துப் பார்ப்பதற்கு நமது நினைவு மிகவும் முக்கியம்  என்றும் கூறிய திருத்தந்தை, நினைவும் நம்பிக்கையும் ஒரு கிறிஸ்தவரின்  அளவுகோல்கள் என்றும் கூறினார்.

இயேசுவைச் சந்திக்கும் பாதையில், பாதியிலே விட்டுவிடும் பல கிறிஸ்தவர்களைப் பார்ப்பது வேதனையாக உள்ளது, இதயம் வெடிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறிய கடுகு விதை வளர்ந்து பலனளிப்பதற்கு நம் மீட்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று மறையுரையையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.