2015-01-30 15:38:00

அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் ஒன்றிணைந்து சாட்சி பகர அழைப்பு


சன.30,2015. அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒருவரையொருவர் ஏற்று, ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து, அமைதி மற்றும் நீதி சார்ந்த விவகாரங்களில் ஒன்றிணைந்து பணிபுரிய அழைக்கப்பட்டுள்ளனர் என்று இவ்வெள்ளியன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்கத் திருஅவை மற்றும் கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே இறையியல் உரையாடல் நடத்தும் பன்னாட்டுக் குழுவின் முப்பது பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இக்காலத்தில் மத்திய கிழக்கில், குறிப்பாக, ஈராக்கிலும் சிரியாவிலும் தொடர்ந்துகொண்டே இருக்கும் துன்பம் நிறைந்த சண்டைகளால், சொல்லமுடியாத கடும் இன்னல்களை எதிர்கொள்ளும் நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் உட்பட பல சிறுபான்மையினரை நினைத்துப் பார்ப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, மத்திய கிழக்கின் பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதற்குச் செபிப்போம் எனக் கூறினார். 

மத்திய கிழக்கில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள், மிகுந்த கவலையையும், வேதனையையும் தருகின்றன என்றும் கூறிய திருத்தந்தை, அனைத்துக் கிறிஸ்தவ சபைகளிலும் வீரத்துவமான சான்று பகர்ந்த பல மறைசாட்சிகள் மற்றும் புனிதர்களின் வாழ்வு கிறிஸ்தவ சமூகங்களை உறுதிப்படுத்த கிறிஸ்து உதவுவாராக என்றும் கூறினார் திருத்தந்தை.

கத்தோலிக்கரையும், கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் சபையினரையும் கொண்ட இந்தப் பன்னாட்டுக் குழுவின் இறையியல் உரையாடல், இவ்விரு சபைகளுக்கு இடையே உடன்பிறப்பு நட்பை வளர்க்க உதவும் என்ற தனது நம்பிக்கையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.