2015-01-29 15:23:00

போதைப்பொருள் அடிமைகளுக்கு சிகிச்சை மையங்கள் அவசியம்


சன.29,2015. இந்தோனேசியாவில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றவாளிகளில் மேலும் ஐந்து பேருக்கு விரைவில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவேளை, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, போதைப்பொருள் வர்த்தகத்தைத் தடைசெய்வதற்கும், போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தோனேசிய அரசைக் கேட்டுள்ளனர் ஆயர்கள்.

மேலும், போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்போருக்கு மறுவாழ்வு சிகிச்சை மையங்களை உருவாக்குவதற்கு நிதி ஒதுக்குமாறும் அரசை வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.

இந்தோனேசியாவில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றவாளிகளில் ஆறு பேருக்கு அண்மை வாரங்களில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களில் நான்கு பேர் வெளிநாட்டவர். இன்னும், பிரான்ஸ், கானா, பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சார்ந்த ஐந்து பேருக்கு விரைவில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகள், இந்தோனேசிய அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, இந்தோனேசியாவில் இக்குற்றத்தைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி மரண தண்டனை என்றும், இக்குற்றவாளிகள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்நாட்டு அரசுத்தலைவர் Joko Widodo Jokowi கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.