2015-01-29 14:37:00

கடுகு சிறுத்தாலும் – முயற்சி செய்பவரே மூச்சுவிடும் மனிதர்


அரசர் ஒருவர் தனது நாட்டு மக்களுக்கு ஒரு போட்டியையும், அதோடு ஒரு நிபந்தனையையும் அறிவித்தார். அரண்மனை கோட்டைக் கதவை கைகளால் திறந்து தள்ள வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் தனது நாட்டின் ஒரு பகுதியை போட்டியில் வெல்பவருக்கு எழுதி வைத்துவிடுவேன். ஆனால் இப்போட்டியில் தோல்வியடைந்தால் தோற்றவரின் கைகள் வெட்டப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பைக் கேட்ட மக்கள் ஆங்காங்கே கூடி பேசத் தொடங்கினர். போட்டி நன்றாகத்தான் இருக்கிறது, போட்டி கடுமையாக இல்லாவிட்டால் மன்னர் இப்படி அறிவிப்பாரா, எதற்கு இந்த அக்கினித் தேர்வு என்று சொல்லி எல்லாரும் பின்வாங்கினார்கள். ஆனால் ஓர் இளைஞர் அங்கு வந்து, தான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்தார். எல்லாரும் வியந்து உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று அந்த இளைஞரைத் தடுக்க முயற்சித்தனர். அதற்கு அந்த இளைஞர், ஐயா, இதில் வென்றால் நானும் ஓர் அரசன். இல்லையென்றால் கைகளை மட்டும்தான் இழப்பேன், எனது உயிரை இல்லையே, முயற்சித்துப் பார்க்கிறேன் என்று கோட்டைக் கதவருகில் சென்றார். தகவல் அரசருக்குச் சென்றது. அரசரும் அவ்விடத்துக்கு வந்தார். அரசரை வணங்கிவிட்டு கோட்டைக் கதவை கைகளால் தள்ளினார் இளைஞர். கதவு சட்டென்று திறந்துகொண்டது. ஏனெனில் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படாமல் அவை திறந்தேதான் இருந்தன. அப்போது அரசர் அந்த இளைஞரைப் பாராட்டி பரிசை வழங்கினார்.  

தோல்வியைக் கண்டு அஞ்சாமல் முயற்சியில் இறங்கினால் வெற்றி நிச்சயம். 

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.