2015-01-28 15:42:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை


குளிர்காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் உரோம் நகரில் இப்புதன் காலை சூரியன் பிரகாசமாக தன் கதிர்களை வீசிக்கொண்டிருந்தாலும், குளிர்காற்றும் தன் இருப்பை சொல்லிக்கொண்டுதான் இருந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற மக்கள் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்குச் செவிமடுக்க குழுமியிருக்க, குடும்பம் குறித்த தன் மறைக்கல்வி போதனைகளைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பம் குறித்த நம் மறைக்கல்வி போதனைகளின் தொடர்ச்சியாக இன்று, குடும்பத்தில் தந்தையர்களின் பங்கு மற்றும் மாண்பு குறித்து நோக்குவோம். இறைவனை, தந்தை என அழைக்க நமக்குக் கற்பித்ததன் மூலம், சமூக வாழ்வின் அடித்தளமாக இருக்கும் இந்த உறவுக்கு ஓர் ஆழத்தையும் வளமையையும் ஊட்டுகிறார் இயேசு. ஆனால், இன்றைய நவீன சமூகங்களில் தந்தையர்தன்மை குறித்த ஒரு நெருக்கடியை நாம் காண்கிறோம். தான் சொல்வதே சரி என நினைப்பதும், ஏன், சிலவேளைகளில் அடக்குமுறையைக் கையாள்வதுமாக தந்தையர் இருக்கும்போது, தந்தையரின் பங்கு குறித்து நிச்சயமற்ற நிலையும் குழப்பமும் ஏற்படுகிறது.

சமூகத்தில் தந்தையர் குறித்த ஒரு வெற்றிடமும் இன்று நிலவுகிறது. அதேவேளை, இன்றைய உலகில் குழந்தைகளுக்கு ஞானத்தையும் ஒழுக்கமதிப்பீடுகளையும் ஊட்டி, எடுத்துக்காட்டாக வழிநடத்தும், பொறுப்புள்ள தந்தையர்கள் தேவைப்படுகின்றனர். தந்தை என்ற இடம் இல்லா நிலையில், இளையோர் தங்களை யாருமற்றவர்களாக உணர்ந்து, தங்கள் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் ஆதரவின்றி அடித்துச் செல்லப்படுவதுபோல் நினைக்கின்றனர். இளையோரை யாருமற்றவர்களாக உணரவிடாமல், அவர்களுக்கு உண்மை மதிப்பீடுகளையும், வாழ்வு நோக்குகளையும், நம்பிக்கைகளையும், வேலைக்கான வாய்ப்புகளையும், உண்மையான ஆன்மீக நிறைவையும் வழங்கவேண்டிய கடமை சமூகத்திற்கு உள்ளது. நம்மை திக்கற்றவர்களாக விடமாட்டேன் என இயேசுவே நமக்கு உறுதி வழங்கியுள்ளார். அதே இறைமகனிடம் நாம் வேண்டுவோம். தந்தையர் குறித்த நம் நல் உணர்வுகளைப் புதுப்பித்து ஆழப்படுத்த உதவவும், குடும்பங்களுக்கும், திருஅவைக்கும், உலகுக்கும் பயன்தரும் வகையில் நல்ல தந்தையர்களை உருவாக்கவும் உதவுமாறு இயேசுவிடம் வேண்டுவோம்.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி போதனையில், குடும்பத்திலும் சமூகத்திலும் தந்தையர்களின் பங்கு குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.