2015-01-28 16:29:00

இந்தியா-2034ல் கூடுதலாக 455 ஜிகாவாட் மின்சாரம் தேவை


சன.28,2015. வரும் 2034ம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த மின் தேவையைச் சமாளிக்க, கூடுதலாக, 455 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என 'பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்' (PwC) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஆய்வு நடத்திய PwC நிறுவனம், வரும் ஆண்டுகளில் மின்தேவையை ஈடுகட்ட, நிலக்கரி அல்லாத இதர வழிமுறைகளை பின்பற்றி மின் உற்பத்தி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது என்று கூறியுள்ளது.

மின் துறையில், டிஜிட்டல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தானியக்க முறையில் தகவல்களை திரட்டுவதன் மூலம், கணிசமாகச் செலவுகளை குறைக்கலாம் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

பாரம்பரியம் சாராத மின் உற்பத்தி முறைகளை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, வரும் 2034ம் ஆண்டிற்குள், கூடுதலாக, 30 கோடி பேருக்கு மின்சாரத்தை வழங்க முடியும். மின்சார தனி நபர் பயன்பாடு ஆண்டுக்கு, 1,800 கிலோ வாட்டாக இருக்கும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

2034ம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த மின்தேவையை நிறைவேற்றுவதற்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்கு 90 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்யவேண்டியுள்ளது என்றும் அந்நிறுவன ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.

ஆதாரம் : PTI/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.