2015-01-28 15:07:00

அமைதி ஆர்வலர்கள் – 1970ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது


சன.28,2015. 1970ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற நார்மன் எர்னெஸ்ட் போர்லாக் (Norman Ernest Borlaug) அவர்கள், ஓர் அமெரிக்க வேளாண் அறிவியலார், உயிரியலாளர் மற்றும் மனிதத்துவவாதி. இவர் பசுமைப் புரட்சியின் தந்தை, வேளாண்மையின் மிகப்பெரிய தகவல் தொடர்பாளர், கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய மனிதர் எனவும் போற்றப்படுகிறார். நொபெல் அமைதி விருது, அமெரிக்க அரசுத்தலைவர் விடுதலைப் பதக்கம், அமெரிக்க காங்கிரஸ் அவையின் தங்கப் பதக்கம் ஆகிய மூன்றையும் வென்ற ஏழு பேரில் நார்மன் போர்லாக் அவர்களும் ஒருவர். அதோடு, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதையும் பெற்றவர் இவர். இவரது கண்டுபிடிப்புகள் மூலம் 24 கோடியே 50 இலட்சம் மக்கள் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. பசுமைப் புரட்சியில் மைய இடத்தில் வைத்துப் போற்றப்படும் நார்மன் ஏர்னெஸ்ட் போர்லாக் அவர்கள், மெக்சிகோவில் கோதுமை விளைச்சலை முன்னேற்றும் நடவடிக்கையில் மெக்சிகோ அறிவியலாளர்களுடன் 27 ஆண்டுகள் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றார். மேலும், புதிய நிலத்தில் புதிய கோதுமையைப் பயிரிடுதல், கோதுமை விளைச்சலை அதிகரித்தல் போன்ற காரணங்களுக்காக உலகின் பிற பகுதிகளுடன், குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில், அறிவியலாளர்களுடன் சேர்ந்து பத்து ஆண்டுகள்  ஒத்துழைத்திருக்கிறார் நார்மன் போர்லாக். 

நார்மன் போர்லாக் அவர்கள், பலதரப்பட்ட மூலங்களிலிருந்து கருத்துக்களைத் தாராளமாக வரவேற்பவர், பிடிவாதமானவர் மற்றும் கொள்கை நோக்குடைய அறிவியலாளர். இந்தப் பண்புகளைக் கொண்டிருந்த இவர், மிகவும் பயனுள்ள நலன்களைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் தொடர் தேடலில் கிடைக்கும் நடைமுறைகளையும், அதன் விளைவுகளையும் ஏற்கவும் செயவார், அதேநேரம் அவற்றைப் புறக்கணிக்கவும் செய்வார். வியக்கத்தக்க வகையில் நிலத்தில் கடினமாக வேலை செய்பவர். இவ்வாறு வேலை செய்யும்போது இவர் தனது உடல் உழைப்பை அதிகம் வெளிப்படுத்துவார். இதற்கு இவரது குடும்பப் பின்னணியும் ஒரு காரணம். அமெரிக்க ஐக்கிய நாட்டின் Iowa மாநிலத்தில் Crescoவுக்கு அருகில், 1914ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, ஹென்றி-கிளாரா போர்லாக் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தார். இவர் தனது கிராமத்தில் 8வது வகுப்புவரை ஓர் ஆசிரியர், ஓர் அறை என்ற அமைப்பில் கல்வி பயின்றவர். எனவே இவர் தனது 7 வயது முதல் 19 வயது வரை தனது குடும்பத்தின் 106 ஏக்கர் நிலத்தில் கடினமாக உழைத்தவர். மேலும், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், சோளம், ஓட்ஸ் உற்பத்தி, மாடுகளுக்குப் புல்வளர்த்தல், பன்றிகள், கோழிகள், விலங்குகள் வளர்த்தல் எனப் பல வேலைகளைச் செய்த இவர், மல்யுத்த விளையாட்டிலும் திறமையானவர். இதுவே இவர் மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில் சேருவதற்குக் கதவுகளைத் திறந்தது. 

நார்மன் போர்லாக் அவர்கள், மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில் வனயியல் கல்வி பயின்றார். 1937ம் ஆண்டில், வனயியலில் இளங்கலைப் பட்டயம் பெறுவதற்கு முன்னரும், அதைப் பெற்ற பின்னரும் Massachusetts மற்றும் Idaho மாநிலங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டு வனயியல் துறையில் பணி செய்தார். இவர் தனது படிப்புக்கு ஆகும் செலவுகளுக்குப் பணம் சேர்ப்பதற்காக, அவ்வப்போது படிப்பை நிறுத்தி வேலையும் செய்தார். இவர் மீண்டும் மின்னெசோட்டா பல்கலைக்கழகம் சென்று, தாவர நோய்கள் குறித்த கல்வி பயின்று அதில் முதுகலைப் பட்டமும், பின்னர், 1942ம் ஆண்டில் அதில் முனைவர் பட்டமும் பெற்றார். du Pont de Nemours நிறுவனத்தில் 1942ம் ஆண்டு முதல் 1944ம் ஆண்டுவரை நுண்உயிரியியலாளராக வேலை செய்தபோது, தொழிற்சாலை மற்றும் வேளாண்மையில் நுண்கிருமிகளை அழிக்கும் பொருள்கள், பூஞ்சான்களை அழிக்கும் பொருள்கள், பதப்படுத்தும் பொருள்கள் குறித்த ஆய்வுக்குழுவுக்குப் பொறுப்பாளராக இருந்தார். மெக்சிகோவில் கோதுமை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் திட்டத்தை வழிநடத்தும் பொறுப்பை 1944ம் ஆண்டில் ஏற்று வழிநடத்தினார். மெக்சிகோ அரசு, ராக்ஃபெல்லர் நிறுவனம் ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியுடன் இவர் மேற்கொண்ட இத்திட்டம் இருபது ஆண்டுகளில் வியக்கத்தக்க வெற்றியை அளித்தது. கோதுமைப் பயிர்களை நோய் தாக்காத மற்றும் வைக்கோல் அதிகமில்லாத, அதேநேரம் அதிக மகசூலை அளிக்கும் கோதுமையை உற்பத்தியை செய்து காட்டினார் இவர். 1956ம் ஆண்டுக்குள் மெக்சிகோ கோதுமையில் தன்னிறைவு பெற்ற ஒரு நாடாக மாறியது. நார்மன் போர்லாக் அவர்களின் இந்த அறிவியல் ஆய்வுகளுடன், மனிதாபிமான உணர்வு கொண்டு உலகில் பசியால் மடிந்த எண்ணற்ற மக்களின் வாழ்வைக் காப்பாற்று முயற்சியில் இறங்கினார். இதனால் புதிய தானிய உற்பத்தியில் ஆர்வம் காட்டி அதிலும் வெற்றி பெற்றார். இவர் கண்டுபிடித்த புதிய கோதுமை உற்பத்தி ஆறு இலத்தீன் அமெரிக்க நாடுகள், பல ஆப்ரிக்க நாடுகள், இந்தியா, பாகிஸ்தான் உட்பட அண்மை மற்றும் தூர கிழக்கு நாடுகளில் பயன்பட்டு வருகிறது. உலகில் பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கிடைப்பதற்கு வழி அமைத்த இவரின் மாபெரும் பணிகளைப் பாராட்டி இவருக்கு 1970ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் நார்மன் போர்லாக் அவர்கள், உலக உணவு விருதையும் உருவாக்கினார். உலகில் உணவின் தரம், அதன் அளவு அல்லது உணவு பலருக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஆகியவற்றுக்காக உழைப்பவர்களுக்கு 1986ம் ஆண்டுமுதல் உலக உணவு விருது வழங்கப்பட்டு வருகிறது.

கோடிக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றிய மனிதாபிமானி, மனிதநலவாதி எனப் போற்றப்படும் நார்மன் போர்லாக் அவர்கள் தனது 95வது வயதில் 2009ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி காலமானார். இவரின் இறப்புக்கு அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டீல் உட்பட பலரும் புகழாராம் சூட்டினர். மனித சமுதாயத்தின் துன்பங்களை அகற்றுவதற்கு அரும்பாடுபட்ட இவர் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்று உலகத் தலைவர்கள் புகழ்ந்து பேசினர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.