2015-01-27 14:51:00

விவிலியத் தேடல் – திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை–பகுதி 3


திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமையின் முதல் பாதிக்கதையில், தோட்டத்தின் உரிமையாளர் வேலையாள்களுடன் கொண்டிருந்த மதிப்பு மிக்க உறவு, நமக்கு சொல்லித் தந்த பாடங்களைச் சென்றவாரத் தேடலில் சிறிது ஆழமாகச் சிந்தித்தோம்.

திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வது கடினமான பணி. பொதுவாகவே வயலில் இறங்கி, அல்லது தோட்டத்தில் வேலை செய்வதற்கு தனிப்பட்டத் திறமையும், பொறுமையும் தேவை. வேலையாள்களின் திறமைக்கும், பொறுமைக்கும் அவர்கள் பெறும் கூலித் தொகை முழு நிறைவைத் தருகிறதா என்பது கேள்வியே! அவர்களில் பலர், தாங்கள் நட்ட செடி ஒரு மரமாக வளர்வதைக் காண்பதிலும், தாங்கள் விதைத்த விதை தானிய மணிகளைத் தாங்கியக் கதிராக வளர்ந்திருப்பதைக் காண்பதிலும் பெறும் நிறைவு, கூலித்தொகையால் பெறும் நிறைவை விட அதிகம் என்பதை நாம் அறிவோம்.

பொதுவாக, நிலங்களிலும், தோட்டங்களிலும் உழைப்பவர்கள், தங்கள் கரங்களால் செய்த வேலையின் விளைவைக் கண்டு மனதிருப்தி அடையும் வாய்ப்பு பெற்றவர்கள். தங்கள் சொந்த நிலத்தில் உழைக்காவிடினும், அடுத்தவர் நிலத்தில், தாங்கள் விதைத்த விதை அல்லது நட்டச் செடி, வளர்ந்து வருவதைக் காணும்போது, தாங்கள் படைப்பாற்றல் பெற்றவர்கள் என்ற மன நிறைவு இவர்களுக்குக் கிடைக்கும்.

இதற்கு மாறாக, பெருநகரங்களில், தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு இத்தகைய மனநிறைவு கிடைப்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு கார் உருவாக்கப்படும் தொழிற்சாலையில் எந்த ஒரு தொழிலாளியும் முழு காரை உருவாக்குவது கிடையாது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சிறு பாகத்தை மட்டும் செய்யும் வாய்ப்பு உருவாகிறது. அதே பாகத்தை, அதே வகையான வேலையை ஒவ்வொரு நாளும் செய்வதால், அவர்களே ஒரு இயந்திரம் போல உழைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களில் யாருக்கும் ஒரு முழுமையான காரை உருவாக்கிய மனநிறைவு கிடைப்பதில்லை. 

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கிய தொழிற் புரட்சியின் விளைவாக, மனிதர்களும் இயந்திரங்களாக மாறிய சோகம் மனித வரலாற்றில் உருவானது. தொழில் புரட்சியைத் தொடர்ந்து, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் வெகு வேகமாக வளர்ந்துள்ளதை அறிவோம். தொழில் நுட்பத்தால் நாம் உருவாக்கிய இயந்திரங்கள், குறிப்பாக, நாம் உருவாக்கியுள்ள கணணிகள் நம் வாழ்வை எவ்வளவு தூரம் ஆக்கிரமித்துள்ளன என்பதைச் சிந்திக்கும்போது நமக்குள் அச்சம் எழுகிறது. அண்மைய ஆண்டுகளில் நிலங்களிலும், தோட்டங்களிலும் மனிதர்கள் செய்யக்கூடிய பல செயல்களை,  இயந்திரங்கள் செய்வது வருத்தம் தரும் ஒரு நிலை. கார்களை உருவாக்கும் தொழிற்சாலைகளைப் போலவே, நமது வயல்வெளிகளும் தோட்டங்களும் மனிதர்களை தங்களிடமிருந்து தூரப்படுத்தி வருகின்றன.

தொழில் நுட்பம் பிரமிப்பூட்டும் வகையில் வளர்ந்துவிட்ட இன்றைய உலகில், மனிதர்களைவிட இயந்திரங்களை நம்பி வாழும் சூழல் உருவாகிவிட்டதால், மனித உழைப்பு மிகவும் மலிவாக மாறிவிட்டது. மனித உழைப்பு மட்டுமல்ல, மனிதர்களே இப்போது மிக, மிக மலிவாகக் கருதப்படுகின்றனர். 

உடலை வருத்தி மேற்கொள்ளப்படும் உழைப்பு மதிக்கப்பட வேண்டும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல தருணங்களில் கூறிவந்துள்ளார். கடந்த ஆண்டு மேமாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ILO (International Labour Organization) எனப்படும் பன்னாட்டு தொழில் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறிய கருத்துக்கள் சிந்திக்கவேண்டியவை: 

"உழைப்பு, இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஒரு பரிசு, ஒரு கடமை. அதனை விலைகொடுத்து வாங்கக்கூடிய பொருளாக மாற்றும்போது, உழைப்பிற்கே உரிய மதிப்பை அழித்து விடுகிறோம்.

வேலையற்ற நிலை, இன்று உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் விளைவாக, வறுமையும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இளையோர், வேலையற்ற நிலைக்குத் தள்ளப்படும்போது, தாங்கள் பயனற்றவர்கள் என்ற உணர்வில் மூழ்கி, சுய மரியாதையை இழந்துவிடுகின்றனர்.

வேலையற்ற நிலை, செய்யும் வேலைக்குத் தக்க ஊதியம் கிடைக்காதச் சூழல், வறுமை ஆகிய துன்பங்களால், நாடு விட்டு, நாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை கூடிவருகிறது; மனித வர்த்தகம் வளர்ந்து வருகிறது.

மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்படும் மனித வர்த்தகம் என்ற பெரும் குற்றத்தையும், பிற கொடுமைகளையும் ஒழிப்பதற்கு, உலக நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் கரம் கோர்த்து வரவேண்டும். மனித உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்க வேண்டும். உழைப்பிற்கு மதிப்பு கூடும்போது, அது மனித மாண்பை மீண்டும் நிலை நாட்டும்."

மனித உழைப்பு, அந்த உழைப்பை மதித்து, தன் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்த திராட்சைத் தோட்ட உரிமையாளர், வேலையாள்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படும் என்று உரிமையாளர் அளித்த வாக்கு  என்று, உவமையின் முதல் பாதிக் கதை, சுமுகமாக, சீராக ஒரு நேர் கோட்டில் பயணிப்பது போல் உள்ளது. உவமையின் மறுபாதியில், இந்த நேர்கோடு வளைந்து நெளிந்து செல்வதைப் போல ஓர் உணர்வு எழுகிறது. இது உவமையில் உருவான பிரச்சனையா, அல்லது, அதைப் புரிந்துகொள்ள முடியாத நம் மனநிலையால் உருவான பிரச்சனையா? இந்தக் கேள்விக்கு விடையளிக்க, என் வாழ்வில் ஏற்பட்ட ஓர் அனுபவம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இதையொத்த அனுபவங்கள் உங்களுக்கும் உருவாகியிருக்கும் என்று தெரியும். 

சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் ஒருநாள் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. இவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றி,  நான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கி விட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின், வரிசையில் வெகு குறைந்த நேரமே நின்றுகொண்டிருந்த பலர் அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர், எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்துச் சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள் அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல். 

வீட்டுக்குத் திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி நேரம் ஆகும் என்று தீர்மானித்துவிட்டேன். அதேபோல், அரைமணி நேரம் கழிந்ததும் என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என் வாய்ப்பை வேறு யாரும் பறித்துச் செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப் பின் வந்து வரிசையில் நின்ற சிலர் எனக்கு ஈடாக, அல்லது எனக்கு முன்னதாக வாய்ப்பு பெற்றனர். இதைக் கண்டு நான் ஏன் எரிச்சல் கொ்ண்டேன்? என்னுடைய வரிசையில் நான் காத்திருக்கும் வரை அமைதியாக இருந்த நான், அடுத்த வரிசை, அடுத்த சன்னல் திறந்ததும் ஏன் கோபமடைந்தேன்? எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப் போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா? அல்லது, அவர்களுக்கு என்னைவிட கூடுதல் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதே என்று கோபமா?

நியாயமாகப் பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும் அரைமணி நேரமாவது அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும். ‘நியாயமாகப் பார்த்தால்’ என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீதி, நியாயங்கள் எல்லாம் நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் பொறாமையை நியாயப்படுத்த நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்குகள்.

என் எரிச்சல், கோபம் எல்லாம் எனக்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகச் சொல்லித் தந்தன. என் மனம் இன்னும் கொஞ்சம் பரந்து விரிய வேண்டும் என்ற உண்மையை இந்தக் கோபம் எனக்கு உணர்த்தியது.

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமையின் பிற்பகுதியை வாசித்தபோது, இதேபோன்றதொரு கோபம் தலைதூக்கியதைப் போல் உணர்ந்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கும் கோபம் தலைதூக்கலாம். நாள் முழுவதும் உழைத்தவருக்கும், நாள் இறுதியில் வந்து ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கும் ஒரு முதலாளியைப் பற்றிய உவமை இது.  இந்த உவமையை முற்றிலும் புரிந்துகொள்வது கடினம் என்று ஒரு சில விவிலிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவேதான், இந்த உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டும் உள்ளது என்பது அவர்கள் கணிப்பு. 

தன் திராட்சைத் தோட்டத்தில் பணி செய்ய ஆட்களைத் தேடிச் செல்லும் ஒரு முதலாளி, காலை 6 மணி முதல் ஆட்களை பணிக்கு அமர்த்துகிறார். மாலை ஐந்து மணி வரை ஆட்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் மாலை 6 மணிக்கு  கூலி கொடுக்கப்படவேண்டும். எனவே, உவமையில் வரும் முதலாளி மாலை ஆறுமணி ஆனதும், தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கத் துவங்குகிறார். இனி தொடர்ந்து, இந்த உவமையை இயேசுவின் வார்த்தைகளிலேயே கேட்போம்:

மத்தேயு நற்செய்தி 20: 8-16

மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்து, கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

அமைதியாக, சுமுகமாக ஆரம்பித்த நாள், திராட்சைத் தோட்ட உரிமையாளருக்கும், வேலையாள்களுக்கும் இடையே மோதல் போன்ற ஒரு சூழலை உருவாக்கிவிட்டது. சவால்கள் நிறைந்த கேள்விகளையும், சிந்தனைகளையும் விளைவிக்கும் இந்தச் சூழல் நமக்குப் பல பாடங்களைப் புகட்டக் காத்திருக்கிறது. நாமும் இன்னும் ஒரு வாரம் காத்திருப்போம், இந்தப் பாடங்களைப் பயில.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.