2015-01-27 16:17:00

மேற்கத்திய அரசுகளின் இராணுவ உதவிக்கு நைஜீரிய ஆயர்கள் அழைப்பு


சன.27,2015. நைஜீரியாவில், போக்கோ ஹராம் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவின் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதை முன்னிட்டு, மேற்கத்திய அரசுகளின் இராணுவ உதவிக்கும், உலகினரின் ஒருமைப்பாட்டுணர்வுக்கும், தோழமைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

கடந்த வாரத்தில் போக்கோ ஹராம் குழு, நைஜீரியாவின் அண்டை நாடான காமரூனில் ஏறக்குறைய 80 பேரைக் கைது செய்து 24 பேரை விடுவித்துள்ளது, இஞ்ஞாயிறன்று நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தின் தலைநகரான மாய்துகுரியை இருமுறை தாக்கியுள்ளது மற்றும் மாய்துகுரிக்கு வடகிழக்கிலுள்ள Monguno நகரைக் கைப்பற்றியுள்ளது. இந்நகரில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.

இது குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய பேராயர் இக்னேஷியஸ் கைகாமா அவர்கள், நாட்டின் வடகிழக்கில் முக்கியமான நகரமாக அமைந்துள்ள மாய்துகுரியை போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர், மேலும், அப்பகுதியின் நிலைமை மோசமடைந்து வருகின்றது என்று கூறினார்.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி இக்குழுவினர் மக்களைக் கொலை செய்கின்றனர் என்றும், இச்சூழலில் உரையாடலால் எப்பயனும் கிடைக்காது என்றும் கூறிய பேராயர், நைஜீரிய அரசும் அனைத்துலக சமுதாயமும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர் என்றும் கூறினார்.

மேலும், மாய்துகுரி நகரையும், அப்பகுதி கிராமங்களையும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர், அரசு எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளது என்று நைஜீரிய ஆயர்களும் கூறினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.