2015-01-27 16:21:00

புனித ஜோசப் வாஸ் நினைவாக திருப்பலிக் கொண்டாட்டங்கள்


சன.27,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், இலங்கையின் முதல் புனிதராக அறிவிக்கப்பட்ட புனித ஜோசப் வாஸ் அவர்களின் நினைவாகத் திருப்பலிக் கொண்டாட்டங்கள் கடந்த சனிக்கிழமையன்று முதன் முதலாக Kurunegalaவில் நடைபெற்றன.

இத்திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றிய கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், இப்புதிய புனிதர், சிறாருக்கும் வயது வந்தோருக்கும் மறைபோதப் பணிக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்று கூறினார்.

இந்தியாவைச் சார்ந்த புனித ஜோசப் வாஸ் அவர்கள், தனது குடும்பத்தையும், நாட்டையும் விட்டு, ஒரு திருத்தூதராக இலங்கைக்கு வந்தார், அச்சமயத்தில் இலங்கையில் கத்தோலிக்கத் திருஅவை எதிர்நோக்கிய அனைத்துத் துன்பங்களையும், பிரச்சனைகளையும் அப்புனிதர் நன்றாகவே அறிந்திருந்தார் என்றும் கூறினார் கர்தினால் இரஞ்சித்.

அண்மையில் கிறிஸ்தவ விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜான் அமரத்துங்க அவர்களும், பல முன்னாள் நாடாளுமன்றத்தினரும் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.

புனித ஜோசப் வாஸ் அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்த, இலங்கையின் வடமேற்கிலுள்ள Kurunegala மறைமாவட்டம் இவ்வாண்டை சிறார் ஆண்டாகவும் அறிவித்து சிறப்பித்து வருகின்றது. இம்மறைமாவட்டத்திலுள்ள Galgamuwa பங்கில் இப்புனிதர் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் உள்ளன.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.