2015-01-27 16:05:00

கடவுளின் திருவுளத்தைப் புரிந்து பின்பற்ற வரம் கேட்போம்


சன.27,2015. கடவுளின் திருவுளத்தைப் புரிந்து, அதைப் பின்பற்றி, அதை முழுமையாய் நிறைவேற்றுவதற்கு வரம் கேட்டு ஒவ்வொரு நாளும் கடவுளிடம் நாம் செபிக்க வேண்டுமெனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இந்நாளைய வாசகங்களை(எபி.10,1-10;மாற்கு3,31-35) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம் விசுவாசத்தின் மூலைக்கற்களில் ஒன்றாகிய கடவுளின் திருவுளத்துக்குப் பணிந்து நடப்பது பற்றிய சிந்தனைகளை வழங்கினார்.

கடவுளின் திருவுளத்துக்குப் பணிந்து நடப்பதுவே ஒவ்வொரு கிறிஸ்தவரின் புனித வாழ்வுக்குரிய பாதை என்றும் கூறிய திருத்தந்தை, இதற்கு எதிரானது, விண்ணகத்தில் ஆதாம் கடவுளுக்குப் பணிய மறுத்ததிலிருந்து தொடங்குகின்றது என்றும் கூறினார்.

ஆதாம் கடவுளுக்குப் பணிய மறுத்தார், இந்தப் பணிவின்மை முழு மனித சமுதாயத்துக்கும் தீமையைக் கொண்டு வந்தது, பாவங்களும்கூட, கடவுளுக்குப் பணிய   மறுக்கும், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றாத செயல்களே என்றும் கூறினார் திருத்தந்தை.

எனினும், கடவுளின் திருவுளத்தைப் பின்பற்றி நடப்பது எளிதானதல்ல, எனவே கடவுளின் திருவுளத்தைப் புரிந்து, அதைப் பின்பற்றி, அதை முழுமையாய் நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு நாளும் கடவுளிடம் அருள் கேட்டு நாம் செபிக்க வேண்டுமென்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.