2015-01-27 15:47:00

உலகமயமாக்கப்பட்டுள்ள புறக்கணிப்பைக் களைவதற்கு முயற்சிப்போம்


சன.27,2015. திருஅவை, சிறப்பாக, நம் பங்குத்தளங்களும், நம் சமூகங்களும் பிரசன்னமாக இருக்கும் அனைத்து இடங்களும் புறக்கணிப்புக் கடலின் மத்தியில் கருணையின் தீவுகளாக மாற வேண்டுமென்று தான் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற பிப்ரவரி 18ம் தேதி தொடங்கும் தவக்காலத்துக்கென, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகமயமாக்கப்பட்டுள்ள புறக்கணிப்பு பற்றி இச்செய்தியில் தான் பேச விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நமக்கு அடுத்திருப்பவரையும், இறைவனையும் புறக்கணித்து வாழ்வது கிறிஸ்தவர்களாகிய நமக்கு உண்மையான சோதனையாக உள்ளது என்றும், தம் மகனை அனுப்பும் அளவுக்கு இவ்வுலகை அன்புகூரும் இறைவன் இவ்வுலகைப் புறக்கணிப்பதில்லை என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இறைவனின் மக்களாகிய நாம் பிறரைப் பறக்கணித்து, நமக்குள்ளே முடங்கி, தன்னலவாதிகளாக இருப்பதிலிருந்து வெளிவருவதற்கு அகவாழ்வில் புதுப்பித்தல் அவசியம், இதற்கு உதவியாக மூன்று விவிலியப் பகுதிகளைப் பரிந்துரைக்க விரும்புவதாக அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும் (1கொரி.12,26), உனது சகோதரன் எங்கே?(தொ.நூ.4,9) உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள் (யாக்.5,8) ஆகிய மூன்று விவிலியப் பகுதிகளின் அடிப்படையில் தனது சிந்தனைகளையும், பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்து நமக்குப் பணிவிடை புரிய அனுமதிப்பதன்மூலம் நாமும் அவர்போல் ஆகிறோம், இறைவார்த்தையைக் கேட்கும்போதும், அருளடையாளங்களை, குறிப்பாக, திருநற்கருணையைப் பெறும்போதும் இது நம்மில் நடைபெறுகின்றது, கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் எவரும் ஒரே உடலாக உள்ளார்கள், அவரில் வாழும் நாம் ஒருவர் மற்றவரைப் புறக்கணித்து வாழ இயலாது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஒன்றிணைந்து செபிப்பதால் கிடைக்கும் நன்மைகளையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, வருகிற மார்ச் 13, 14ம் தேதிகளில் உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் கடைப்பிடிக்கப்படும் 24 மணி நேர செப முயற்சி, பிறரன்புச் செயல்களைச் செய்யத் தூண்டும் என்ற தனது நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

கருணை நிறைந்த இதயம் பலவீனமானது என்று அர்த்தமல்ல, மாறாக அது உறுதியான மற்றும் வலுவான இதயம், சோதிப்பவனை விரட்டி, இறைவனுக்குத் திறந்த மனதுடையதாக அது இருக்கும் என்று தனது தவக்காலச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற பிப்ரவரி 18ம் தேதி தொடங்கும் இவ்வாண்டின் தவக்காலம், உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள் (யாக்.5,8) என்ற தலைப்பை மையமாகக் கொண்டிருக்கின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தி இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.