2015-01-27 16:08:00

அளவிடமுடியாத துன்பங்களின் வேதனையோடு ஆஷ்விஷ் கதறுகிறது


சன.27,2015. “அளவிடமுடியாத துன்பங்களின் வேதனையோடு ஆஷ்விஷ் கதறுகிறது மற்றும் மக்கள் மத்தியில் ஒருவரையொருவர் மதித்தல், அமைதி, சந்திப்பு ஆகியவற்றைக் கொண்ட வருங்காலத்துக்காக அது கெஞ்சுகிறது” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்ட ஆஷ்விஷ் நாத்சி வதைப்போர் முகாம் விடுதலை செய்யப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறு டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை.

மேலும், புதிய கர்தினால்களை ஏற்படுத்துதல், சில அருளாளர்களுக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கு அங்கீரித்தல், திருநீற்றுப் புதன் திருப்பலி என, வருகிற பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்ற இருக்கும் திருவழிபாட்டு நிகழ்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

19ம் உலக துறவியர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி, பிப்ரவரி 14ம் தேதி புதிய கர்தினால்களை ஏற்படுத்துதல், 18ம் தேதி புனித ஆன்செல்ம் பசிலிக்காவில் மாலை 4.30 மணிக்கு திருநீற்றுப் புதன் பவனி போன்ற நிகழ்வுகளை நிறைவேற்றும் திருத்தந்தை, பிப்ரவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆண்டு தியானத்தையும் செய்வார் என திருத்தந்தையின் திருவழிபாட்டுத் துறை அறிவித்துள்ளது.

மார்ச் 21ம் தேதி பொம்பைக்குத் திருத்தூதுப் பயணம், 29ம் தேதி வத்திக்கான் பேதுரு வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி, இன்னும் ஏப்ரலில் புனித வார நிகழ்வுகள், பங்குத்தளங்களுக்குச் செல்லுதல் போன்ற திருத்தந்தையின் நிகழ்வுகளையும் திருவழிபாட்டுத் துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.