2015-01-26 15:34:00

இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்


சன.26,2015. இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில், தமிழகம், முதல் இடத்தில் உள்ளது என்றும், தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், உடல் உறுப்பு தானத்தால், 2,178 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில், உடல் உறுப்பு தானம் குறித்து, மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் தமிழகம் இதில் முதலிடத்தில் உள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த 2008ம் ஆண்டில், விபத்தில் உயிரிழந்த, காஞ்சிபுரம் இதயேந்திரன் என்ற ஒரே மகனின் உடல் உறுப்புகளை, பெற்றோர் தானம் அளித்ததன் மூலம், தமிழகத்தில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

இதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, உறுப்பு தானத்தை முறைப்படுத்த, உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தை துவக்கியது. பதிவு செய்து காத்திருப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில், மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, தரப்பட்டு வருகின்றன.

சென்னை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட, ஐந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.

தமிழகத்தில் இதுவரை, 571 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு உள்ளன. இதயம் - 110; நுரையீரல் - 48; கல்லீரல் - 527; சிறுநீரகம் - 1,024; கணையம் - 4; இதய வால்வுகள் - 552, கண் - 854; தோல் - 13 என, 3,133 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு உள்ளன. இதுவரை, 3,063 பேர் பயன்பெற்று உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 2,178 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

மாநில அளவில் உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று மையமும், மண்டல அளவில் அதுபோன்று மையங்களும் ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன' என, நலவாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஆதாரம் :  தினமலர்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.