2015-01-23 16:18:00

திருத்தந்தை–கடவுள் எப்பொழுதும் ஒவ்வொன்றையும் மன்னிக்கிறார்


சன.23,2015. ஒப்புரவு அருளடையாளம் என்பது தீர்ப்பளிப்பது அல்ல, ஆனால் அது, விதிவிலக்கு ஏதுமின்றி நம் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவனைச் சந்திப்பதாகும் என்று, இவ்வெள்ளி காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாளைய முதல் வாசகமான எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் கடவுள், நம் பாவங்கள் அனைத்தையும், எப்பொழுதும், விதிவிலக்கின்றி மன்னிக்கிறார், யாராவது அவரிடம் மன்னிப்புக் கேட்கும்போது அவர் அகமகிழ்வடைகிறார் என்றும் கூறினார்.

ஒப்புரவாக்கும் இத்தகைய நம் கடவுள் மனித சமுதாயத்துடன் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு இயேசுவைத் தேர்ந்தெடுத்தார், இந்த உடன்படிக்கையின் மூலைக்கல் நம் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.

எல்லாவற்றுக்கும் முதலாவதாக, கடவுள் எப்பொழுதும் நம்மை மன்னிக்கிறார், இதில் அவர் சோர்வடைவதே இல்லை, அவரிடம் மன்னிப்புக் கேட்பதற்கு நாம்தான் களைப்படைந்து விடுகிறோம் என்றும் கூறிய திருத்தந்தை, மன்னிப்பதில் கடவுள் சோர்வடைவதே இல்லை என்று கூறினார்.

நான் எத்தனை முறைகள் மன்னிக்க வேண்டும், ஏழுமுறை மட்டுமா என பேதுரு இயேசுவிடம் கேட்டபோது, ஏழுமுறை மட்டுமல்ல, ஏழு எழுபது முறை அதாவது கணக்கின்றி மன்னிக்க வேண்டும் என இயேசு பதில் சொன்னார், இவ்வாறுதான் கடவுள் நம்மை எப்பொழுதும் மன்னிக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறச் செல்வது, அழுக்குகளைப் போக்குவதற்குத் துணி துவைப்பவரிடம் செல்வது போன்றதன்று, ஆனால் இது நம்மோடு ஒப்புரவாகும் வானகத்தந்தையைச் சந்திக்கச் செல்வதாகும், எனவே நம் சிறாரும் இளையோரும் இந்த அருளடையாளத்தை நல்லவிதமாகப் பெறுவதற்கு நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.