2015-01-23 15:49:00

உண்மையான தொடர்புகளைக் குடும்பங்களில் கற்றுக்கொள்கிறோம்


சன.23,2015.  குடும்பங்கள், சமுதாயத்துக்கு பிரச்சனை தரும் ஒன்றாக நோக்கப்படாமல், வளமை வழங்கும் ஓர் ஊற்றாக நோக்கப்படுமாறு கூறியுள்ளஅதேவேளை, குடும்பங்கள், கிறிஸ்துவின் அன்பு, கனிவு, தோழமை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாக வாழுமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற மே 17ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் 49வது உலக கத்தோலிக்க சமூகத் தொடர்பு நாளுக்கென இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, குடும்பங்கள், தொடர்புகளின் எடுத்துக்காட்டுகள் என்ற தலைப்பை மையமாகக் கொண்டிருக்கிறது.

தகவல்களை உருவாக்கி அவற்றை எப்படி வெளிப்படுத்துவது என்பது அல்ல, நாம் ஒருவர் ஒருவரோடு எப்படி தொடர்பு கொள்ள வேண்டுமென்பதைக் கற்றுக்கொள்ளும் சவாலை இக்காலத்தில் நாம் எதிர்கொள்கிறோம் என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், டுவிட்டரில் பதிவு  செய்வது, ஐபோனில் பேசுவது போன்ற இக்காலத்திய நவீன கணனிகளை வைத்துவிட்டு ஒருவர் ஒருவருடன் பேசுவதற்கு நாம் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அன்னை மரியா தனது உறவினர் எலிசபெத்தம்மாளைச் சந்தித்த நற்செய்திப் பகுதியோடு தொடர்புடைய சிந்தனைகளை வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று, பிறரைச் சந்திப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி நாம் பிறக்கும் முன்னே தொடங்கி விடுகின்றது, இது ஒருவிதத்தில் தொடர்புகளின் ஒவ்வொரு வடிவத்தின் அடையாளமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

குடும்பத்தில், தாயின் உதரத்தில் வளரும்போதே, சந்திப்பதையும், மொழியையும், செபத்தையும், நெருக்கத்தையும், மன்னிப்பையும் கற்றுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த உலகில் மக்கள் அடிக்கடி சாபங்களையும், அருவெறுப்பான மொழிகளையும் பிறரைப் பற்றி மோசமாகவும் பேசுகின்றனர், இது மனிதச் சூழல்களில் பிணக்குகளை விதைக்கின்றன. புறங்கூறுதலால் மனிதச் சூழல்கள் நஞ்சூட்டப்படுகின்றன, குடும்பம் ஊடகத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் தொடர்புகளை ஓர் ஆசீர்வாதமாகப் புரிந்துகொள்வதற்கு குடும்பங்கள் நமக்குக் கற்பிக்க முடியும் என்று எழுதியுள்ளார் திருத்தந்தை.

வெறுப்பும் வன்முறையும் ஆதிக்கம் செலுத்துவதுபோன்று தோன்றும் சூழல்களில், குடும்பங்கள் கற்சுவர்களால் பிரிக்கப்பட்டுள்ள அல்லது ஊடுருவமுடியாத முற்சார்பு எண்ணங்கள் மற்றும் பகைகளால் சூழப்பட்டுள்ள நிலைகளில் சாபங்களைவிட ஆசீர்வாதங்களால், சண்டைபோடுவதைவிட ஏற்றுக்கொள்வதால், பதிலடி கொடுப்பதைவிட சந்திப்பதால் தீமைச் சுருள்களை உடைத்தெறிய முடியும், நன்மைத்தனம் எப்போதும் இயலக்கூடியதே என்பதை உணர முடியும், சிறாருக்கும் தோழமையுணர்வைக் கற்பிக்க முடியும் என்று எழுதியுள்ளார் திருத்தந்தை.

“குடும்பங்களில் தொடர்பு - அன்பின் கொடையுடன் சந்திப்பதற்கு சலுகைபெற்ற இடம்” என்பது இந்த உலக நாளின் தலைப்பாகும்.

ஆண்டுதோறும் தூய ஆவியார் பெருவிழாவுக்கு முந்திய ஞாயிறன்று உலக கத்தோலிக்க சமூகத் தொடர்பு நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இந்நாளுக்குரிய திருத்தந்தையின் செய்தி, பொதுவாக, பத்திரிகையாளர்களின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் விழாவன்று வெளியிடப்படுகிறது. இப்புனிதரின் விழா சனவரி 24.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.