2015-01-22 16:22:00

கத்தோலிக்கரும்,லூத்தரன் சபையினரும் இணைந்து சான்று பகர இயலும்


சன.22,2015. நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை, அடக்குமுறை, வேதனை, துன்பம் ஆகியவை பரவலாக அனுபவிக்கப்படும் இன்றைய உலகுக்கு கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்தும் சாட்சிய வாழ்வு மிகவும் தேவைப்படுகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஃபின்லாந்து நாட்டின் பாதுகாவலராகிய புனித Henrik விழாவை முன்னிட்டு அந்நாட்டிலிருந்து வந்திருந்த கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவின் 12 பிரதிநிதிகளை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இறைவனின் கருணைக்கு ஒன்றிணைந்து சான்று பகருவதற்கு மேலும் அதிகம் ஆற்ற முடியும் என்று கூறினார்.

கிறிஸ்து சமாரியப் பெண்ணிடம் “குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடும்”(யோவா.4,7-8) என்று கிணற்றருகில் கேட்ட இறைச்சொற்களைத் தலைப்பாகக் கொண்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் பற்றியும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

கத்தோலிக்க மற்றும் லூத்தரன் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே இடம்பெறும் இறையியல் உரையாடலில் ஏற்படும் முன்னேற்றத்தால் இவ்விரு சபைகளும் ஒன்றிணைந்து வழங்கும் சாட்சிய வாழ்வு, தொடர்ந்து பேணப்பட்டு ஊக்கப்படுத்தப்படும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் வாழ்வில் ஏற்புடைமை என்ற தலைப்பில் ஃபின்லாந்து மற்றும் சுவீடனில் இடம்பெறும் கத்தோலிக்க மற்றும் லூத்தரன் சபைகளுக்கு இடையேயான உரையாடல் குறித்த முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தப் பிரதிநிதிகளின் உரோம் பயணம், ஃபின்லாந்தில் இவ்விரு சபைகளுக்கு இடையே உள்ள உறவு மேலும் உறுதிப்பட உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18ம் தேதி முதல் புனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25ம் தேதி வரை உலகின் 345க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகள், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைக் கடைப்பிடிக்கின்றன.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.