2015-01-22 16:30:00

இறையன்பாகிய அசைக்க முடியாத பாறையின்மீது நம்பிக்கை வையுங்கள்


சன.22,2015. வத்திக்கானில் பொது பாதுகாப்புப் பணிகளை ஆற்றிவரும் காவல்துறையினர், நிர்வாகிகள் மற்றும் அலுவலகர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அயலவருக்குப் பாதுகாப்புப் பணிசெய்வதற்கு இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதன்  முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னார்.

நாம் நமக்கு அடுத்திருப்பவருக்குச் செய்யும் செயல்கள் நல்லவையோ, கெட்டவையோ, எதுவானாலும், இயேசு நம்மிடம் ஒப்படைத்துள்ள பொறுப்புகள் பற்றி கணக்குக் கேட்பார் என்றும் கூறிய திருத்தந்தை, இந்தப் பணியாளர்களின் பணி, மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களை உள்ளடக்கியது என்றும் கூறினார்.

கிறிஸ்தவ உரோமையின் மையத்துக்கு வருகின்ற இலட்சக்கணக்கான திருப்பயணிகளின் விசுவாசத்திலும், வாழ்விலும் வத்திக்கான் பாதுகாப்புப் பணியாளர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறிய திருத்தந்தை, உங்களின் பிரசன்னமும் செயல்பாடுகளும் திருப்பயணிகளுக்கு உதவுவதாய் அமையவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

புதிய ஆண்டைத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், மனித சமுதாயத்தைக் கவலைக்கு உள்ளாக்கும் ஆபத்துக்கள் மத்தியில் சோர்வடையாமல், இறையன்பு என்ற அசைக்க முடியாத பாறையின்மீது நம்பிக்கை வைத்து வாழுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இவர்களின் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.

வத்திக்கானில் பொது பாதுகாப்புப் பணிகளை ஆற்றும் காவல்துறை அமைப்பு தொடங்கியதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இச்சந்திப்பு இடம்பெற்றது. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.