2015-01-21 15:39:00

அமைதி ஆர்வலர்கள் : 1969ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது


சன.21,2015. 1969ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை, ஐ.நா. நிறுவனத்தின் ILO என்ற உலக தொழில் நிறுவனம் பெற்றது. இப்படி ஒரு நிறுவனம் உருவாக்கப்பட வேண்டுமென வெர்செய்ல்ஸ் அமைதிக் கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ILO என்ற நிறுவனத்துக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. தொழிலாளருக்கு நீதி கிடைக்கவும், வளரும் நாடுகளுக்குத் தொழில்நுட்ப உதவிகள் செய்ததற்கும், பல குழுக்கள் மத்தியில் அமைதியை நிலைநாட்ட உழைத்ததற்கும் இவ்விருது வழங்கப்பட்டது.  "நீ அமைதியை விரும்பினால் நீதியைப் உறுதியாக நிலைநாட்டு" என்ற விருதுவாக்குடன், 1919ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் தொழிலாளரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ILO நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்களுக்குத் தரமான வேலைகளையும், சமூக உரிமைகளையும் முன்னேற்றும் கொள்கைகளை உருவாக்குவது இதன் முக்கிய பணியாகும். 2013ம் ஆண்டின் நிலவரப்படி, ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 185, ILO நிறுவனத்தின் உறுப்பு நாடுகளாக உள்ளன. அன்டோரா, பூட்டான், மைக்ரோனேசியா, மோனக்கோ, வட கொரியா, Liechtenstein, டோங்கா ஆகிய நாடுகள் இன்னும் இந்நிறுவனத்தில் இணையவில்லை.

ILO உலக தொழில் நிறுவனத்தின் நிர்வாகக் குழு, இந்நிறுவனக் கருத்தரங்குகளுக்குத் தலைப்புக்களையும், நிகழ்ச்சித் திட்டங்களையும், வரவு செலவுகளையும் நிர்ணயிக்கின்றது, இதன் பொது இயக்குனரைத் தேர்ந்தெடுக்கின்றது, தொழில் சார்ந்தவைகளில் உறுப்பு நாடுகளிலிருந்து தகவல்களைச் சேகரிக்கின்றது மற்றும் அனைத்துலக தொழில் நிறுவன அலுவலகத்தை மேற்பார்வையிடுகின்றது. இந்த நிறுவனத்தின் வழிகாட்டும் குழு, 28 அரசுகள், 14 தொழிலாளர் அமைப்புகள், 14 வேலைக்கு அமர்த்துவோர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கின்றது. இந்த அரசுகளின் பிரதிநிதிகளில் பத்துப் பேர் தொழிற்சாலை முக்கியத்துவம் பெற்றுள்ள நாடுகளைச் சார்ந்தவர்கள். இவர்கள், பாரபட்சமற்ற குழு என முதலில் அழைக்கப்பட்டனர். இந்தக் குழுவில், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், இரஷ்யக் கூட்டமைப்பு, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவை உள்ளன. இவற்றின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.

ILO தொழில் நிறுவனம் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஜெனீவாவில், ஆண்டுக் கருத்தரங்கை நடத்தி, தொழில் சார்ந்த ஒப்பந்தங்களையும், பரிந்துரைகளையும் ஏற்படுத்தி அமல்படுத்துகிறது. தொழில் பாராளுமன்றம் எனவும் அழைக்கப்படும் இக்கருத்தரங்கு, ILO தொழில் நிறுவனத்தின் பொதுவான கொள்கைகள், பணித் திட்டங்கள், வரவுசெலவு ஆகியவை பற்றியும் தீர்மானங்களை எடுக்கின்றது. இக்கருத்தரங்குக்கு ஒவ்வோர் உறுப்பு நாடும் இரு அரசு பிரதிநிதிகள், வேலை வழங்கும் அமைப்பின் ஒரு பிரதிநிதி, ஒரு தொழிலாளர் பிரதிநிதி என நான்கு பேரை அனுப்புகின்றது. இந்த நால்வருக்கும் தனித்தனியாக ஓட்டுரிமை உள்ளது. 2011ம் ஆண்டுவரை 189 ஒப்பந்தகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தகள் அமல்படுத்தப்படுத்தப்படுவதற்குத் தேவையான அரசுகளின் எண்ணிக்கை இருந்தால் இவை உலக அளவில் அமலுக்கு வருகின்றன. 1998ம் ஆண்டில் நடந்த 86வது அனைத்துலக தொழில் கருத்தரங்கில் தொழில் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளும் உரிமைகளும் கொண்டுவரப்பட்டன. தொழிலாளர்கள் சுதந்திரமாக ஒன்று சேரவும், கூட்டாகப் பரிந்துரைக்கவும் உரிமை, கட்டாய வேலை நிறுத்தப்படல், குழந்தைத் தொழில்முறை நிறுத்தப்படல், தொழிலாளர் மத்தியில் நியாயமற்ற பாகுபாடுகள் நிறுத்தப்படல் ஆகிய நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் கொண்டுவரப்பட்டன. தனது உறுப்பு நாடுகள் இந்த ஒப்பந்தங்களை அமல்படுத்த வேண்டுமென இந்த நிறுவனம் வலியுறுத்துகிறது.

ILO அனைத்துலக தொழில் நிறுவனம், ஐ.நா.வின் சிறப்பு நிறுவனமாக விளங்குகிறது. முதல் உலகப் போருக்குப் பின்னர் நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு நிறுவனமாக இது உருவாக்கப்பட்டபோது இதனை ஆரம்பித்தவர்கள் 1919ம் ஆண்டுக்கு முன்னர் சமூகச் சிந்தனைகளிலும், செயல்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். சமூகக் கோட்பாடுகள் குறித்த அறிவையும், அனுபவங்களையும், நல்ல கருத்துக்களையும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டவர்கள். இவர்கள் முதல் உலகப்போர் முடிந்த பின்னர் தொழிலாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படவும் பரிந்துரைகளை முன்வைத்தனர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் சுவிட்சர்லாந்து ஜெர்மன் படைகளால் சூழப்பட்டபோது இந்நிறுவனம் கானாடாவுக்குச் சென்றது. 1946ம் ஆண்டில் நாடுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டபோது இந்நிறுவனம் மட்டுமே அதன் முதல் சிறப்பு அமைப்பாக மாறியது. வேலைவாய்ப்பு, கல்வி, வேலையில் சுரண்டல் என தொழில் சார்ந்த புள்ளி விபரங்களை இந்நிறுவனம் உலகுக்கு வழங்கி வருகிறது. இவ்விபரங்கள், நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கு உதவுகின்றன. எய்ட்ஸ் நோயாளிகள், குடியேற்றதாரர், வீட்டுவேலை செய்பவர்கள் என எல்லாத் தரப்புகளிலும் தொழிலாளரின் உரிமைகளுக்காகவும், அனைவருக்கும் தரமான வேலை கிடைப்பதற்காகவும் போராடி வரும் ILO அனைத்துலக தொழில் நிறுவனம் 1969ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றது. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.